கிராமங்களை பலப்படுத்தும் உரிமை சபைகளை அமைப்பதற்கு ஆளுநர் யோசனை
Thursday, 20 Feb 2020

கிராமங்களை பலப்படுத்தும் உரிமை சபைகளை அமைப்பதற்கு ஆளுநர் யோசனை

11 February 2019 05:27 am

வட மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு கிராமங்களின் தனித்துவங்களை இனங்கண்டு அக் கிராமங்களை பலப்படுத்தும் நோக்கில் கிராம சக்தி உரிமை சபைகளை ஸ்தாபிப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யோசனை வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தை சோந்த அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே மேற்குறித்த யோசனையை ஆளுநர் முன்வைத்துள்ளார்.

கிராமங்களில் மக்கள் அதிகளவான பிரச்சினைகளுக்கு முகம்ப்கொடுத்து வருவதுடன் அவற்றை தீர்ப்பதில் அரச நியமனம் பெற்ற உத்தியோகதர்கள் என்ற ரீதியில் அரசுக்கு நேரடியாக பணிபுரியும் கிராம சேவையாளர்களுக்கு பாரிய பொறுப்புக்கள் இருக்கிறது என்பதையும் ஆளுநர்அவர்கள் சுட்டிக்காட்டியதுடன் கிராம சக்தி உரிமை சபைகளைஅமைப்பதன் ஊடாக மக்களின் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வுகளை வழங்க முடியும் என்பதையும் ஆளுநர் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

suren ragavan 01

அந்த வகையில் ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த கிராம சேவகர் மற்றும் 10 பேரை இணைத்து (அதில் 4 பேர் கட்டாயம் பெண்களாக இருக்கவேண்டும்) ஒரு குழுவை ஸ்தாபித்து அந்த குழு கிராம சக்தி உரிமை சபையாக உருவாக்கப்படும்.

வட மாகாணத்தில் மொத்தமாக 989 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் உள்ளதுடன் முதன் முறையாக மன்னார் மாவட்டத்தில் இருந்து இதனை ஆரம்பித்து வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விஸ்திரணப்படுத்தப்படுவது இதன் நோக்கம்.

இன்னும் இரு வாரங்களில் இந்த குழு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்டச் செயலாளரின் கீழ் கிராம உத்தியோகத்தர்களின் பொறுப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த குழுவில் அரசியல் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஆலோசனைகள் இருப்பின் தெரியப்படுத்த முடியும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.