ஆறுமுகனின் முகத்திரையைக் கிழித்த ஊடகவியலாளர் : மின்னலில் ஊடகவியலாளரை போட்டுத் தாக்கும் ரங்கா
Wednesday, 20 Jan 2021

ஆறுமுகனின் முகத்திரையைக் கிழித்த ஊடகவியலாளர் : மின்னலில் ஊடகவியலாளரை போட்டுத் தாக்கும் ரங்கா

10 February 2019 04:48 pm

ஹட்டனில் முன்னணி பாடசாலையான புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக ஆறுமுகன் தொண்டமான் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்த ஆறுமுகன் தொண்டமான், மாணவர்களை பல மணி நேரம் காக்க வைத்து, பின்னர் இடைநடுவில் திரும்பிச் சென்ற சம்பவம் பாடசாலை சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பிரதான ஊடகங்களில் வெளிவராத நிலையில், சமூக வலைத்தளத்தில் ஊடகவியலாளர் ஆர்.நிர்ஷன் பகிரங்கமாக எழுதியிருந்தார். (முழுமையான பதிவு கீழே)

இ.தொ.காவிற்கு சார்பாக செயற்பட்டு வரும் முன்னாள் அரசியல்வாதியும், சக்தி தொலைக்காட்சியின் மின்னல் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜே.ஶ்ரீரங்கா, ஊடகவியலாளர் ஆர்.நிர்சனை 10.02.2019 அன்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கடுமையாக தாக்கியுள்ளார்.

ஏற்கனவே, இ.தொ.காவின் உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான சக்திவேலை மின்னல் நிகழ்ச்சிக்கு அழைத்துவந்து, சொல்லிக்கொடுத்து நடத்திய ஒரு நிகழ்ச்சியின் பின்னர், மின்னல் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை முழுமையாக இழக்கப்பட்டது.

அதேபோல், 10.02.2019 அன்று ஒளிபரப்பான மின்னல் நிகழ்ச்சியிலும், அழைத்துவந்த அதிதிக்கு சொல்லிக் கொடுத்து, ஊடகவியலாளர் நிர்சனைத் தாக்கியதைக் காண முடிந்தது.

அழைத்துவந்த அதிதி, 2015ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஜே.ஶ்ரீரங்கா தலைமையிலான பிரஜைகள் முன்னணியில் போட்டியிட்ட வேட்பாளராவார்.

புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டியில் இ.தொ.கா. தலைவர் நடந்துகொண்ட விதத்தை பகிரங்கமாக எழுதிய ஊடகவியலாளர் நிர்சனை, ஜே.ஶ்ரீரங்கா திட்டமிட்டு, தமது முன்னாள் வேட்பாளரை வைத்து விமர்த்துள்ளதைக் காண முடிந்தது. (ஊடகவியலாளர் நிர்சன் பணி புரியும் இடம் குறித்து அதிதி தவறான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.)
ஊடகவியலாளர் ஆர்.நிர்ஷனை எதிர்காலத்திலும் தொடர்ந்து தாக்கி, ஜே.ஶ்ரீரங்கா தமது வங்குரோத்து அரசியலை முன்னெடுக்கக் கூடும்.

புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்களின் உள்ளக் குமுறலையே நிர்ஷன் வெளியிட்டிருந்தார்.
 

ஊடகவியலாளர் ஆர்.நிர்ஷன் முகநூலில் வெளியிட்டிருந்த செய்தி :

ஆறுமுகனின் மிக மோசமான செயலை கண்டிக்கிறேன்!

ஹற்றனில் பிரசித்தி பெற்ற புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக ஆறுமுகன் தொண்டமான் அழைக்கப்பட்டிருந்தார்.

போட்டி நிகழ்வுகள் டன்பார் மைதானத்தில் இன்று (09) பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டு ஆறுமுகனின் முழுமையான சம்மதத்துடனே ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இன்றைய நிகழ்வுக்கு இ.தொ.கா.வின் ஏனைய உறுப்பினர்கள் நேரகாலத்தோடு வருகை தந்திருந்தபோதிலும் மாலை 3.30 மணிவரை ஆறுமுகன் சமூகம் தரவில்லை. ஆறுமுகனுக்காக பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், அதிதிகள், விருந்தினர்கள், பழைய மாணவர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரும் காத்திருந்தனர். அவர் வருகை தரும் சரியான நேரத்தையும் யாருக்கும் அறிவிக்கவில்லை.

இவ்வாறிருக்கையில் பிற்பகல் 3.45 மணிக்கு வருகை தந்த ஆறுமுகன் நிகழ்வுக்குச் சமூகம் தராமல் உடனடியாகத் திரும்பிச் சென்றுள்ளார். அவர் வரும் வழியில் வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையே இதற்குக் காரணம் என அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரைக் கெஞ்சி அழைத்த போதும் மறுப்புத் தெரிவித்துவிட்டு, வாகனம் அதி வேகத்தில் பயணித்துள்ளது.

இது முழுப்பாடசாலையின் கல்விச் சமூகத்தை மாத்திரமல்லாது மலையகத்தையும் அவமதித்த செயலாகவே கருதுகிறேன்.

மலையகத்தின் முதல் நீதவானை, பேராசிரியர்களை, கல்விமான்களை, ஊடகவியலாளர்களை, துறைசார் நிபுணர்களை உருவாக்கிய கல்லூரிக்கு ஆறுமுகன் கொடுத்த பரிசு இதுதானா? அதிகாரமும் அகங்காரமும் ஒரு மனிதனை எந்தளவுக்கு மாற்றியிருக்கின்றன என்பதற்கு இது நல்லதோர் உதாரணம்.

உங்களைப் போன்றோரைத் தெரிவு செய்தோமே என வெட்கித் தலைகுனிகிறோம்.