முதலில் மாகாண சபைத் தேர்தல் – ஜனாதிபதி
Wednesday, 20 Jan 2021

முதலில் மாகாண சபைத் தேர்தல் – ஜனாதிபதி

10 February 2019 04:29 am

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் இன்று ஜனாதிபதித் தேர்தலை நடத்துமாறு சிலர் கோருகின்றனர். அவ்வாறான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால், எனது பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அந்த தேர்தல் நடத்தப்படும். அதனை எவராலும் தடுக்க முடியாது. அதேபோல் எவரும் பலவந்தமாக தேர்தலை நடத்த முடியாது. எனக்கு மாத்திரமே அதற்கான உரிமை உள்ளது.

எனினும் அதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள குளறுபடிகளை நிவர்த்திசெய்து இத்தேர்தலை உறுதியாக நடத்தவேண்டும்.

எனது 4 வருட ஆட்சியில் ஊழலை ஒழிக்க முடிந்துள்ளது. சுதந்திரமாக வாழ்வதற்கு வழியேற்பட்டது. ஆனால் அந்த சுதந்தரத்தை சீர்குலைக்கும் சக்தியாக போதைப்பொருள் வியாபாரம் இருக்கின்றது.

போதைப் பொருள் பாவனை தற்போது சமூகத்திற்கு ஒரு புற்றுநோயாகியுள்ளது. சிலர் என்னை ஜனாதிபதியாக்கி அதன் மூலம் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முற்பட்டனர். மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியதன் நோக்கத்தை அவர்கள் சீரழித்தனர்” என்று குறிப்பிட்டார்.