முஸ்லிம் மக்களுக்கு பெரும் காவலாக இருந்த STF லதீப் ஓய்வு!
Thursday, 23 Jan 2020

முஸ்லிம் மக்களுக்கு பெரும் காவலாக இருந்த STF லதீப் ஓய்வு!

3 February 2019 06:00 am

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) பிரதான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லதீப்பின் சேவைக்காலம் இன்றுடன் (03) நிறைவுக்கு வருகிறது.

பொலிஸ் அதிகாரி லதீப், தனது பணிக் காலத்தின்போது மிகச் சிறந்த முறையில் செயற்பட்டு பல சோதனைகளை வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளின் போது, பொலிஸ் அதிகாரி லதீப் பல தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அத்துடன், நெருக்கடியான அந்த காலகட்டங்களில் முஸ்லிம் மக்களின் நம்பிக்கையாகவும் அவர் இருந்துவந்தார். முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி, தனது கடமைகளின் போது மிகவும் தீர்க்கமான சேவையை விசேட அதிரடிப்படைப் பிரிவிற்கு லதீப் வழங்கியிருந்தார்.

பொதுவாக இவ்வாறான அதிகாரிகள் தமது சேவைக் காலத்தை நீடிக்கக் கோருவதில்லை. அதிகாரிகளின் சேவை அர்ப்பணிப்பைப் பார்த்து, அமைச்சின் ஊடாக குறித்த அதிகாரியின் சேவைக் காலத்தை நீடிக்குமாறு பொலிஸ் திணைக்களம் கோரிக்கை முன்வைக்க முடியும். லதீப் போன்ற அதிகாரியின் சேவையை நீடிக்கக் கோரி இதற்கு முன்னரே கடிதம் அனுப்பியிருக்க வேண்டும். எனினும், அவ்வாறான ஒரு கோரிக்கைக் கடிதம் இதுவரை துறைசார் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவில்லை.

இதற்கு முக்கிய காரணம் பொலிஸ்மா அதிபர் பூஜித் சேனாட் பண்டார ஜயசுந்தர, சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லதீப்புடன் நட்புரீதியான உறவு இல்லையென பொலிஸ் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 வயதைக் கடந்த எந்தவொரு அதிகாரியும் பொலிஸ் சேவைக்குத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் பொலிஸ்மா அதிபர் இருப்பதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.