ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் தல
Thursday, 23 Jan 2020

ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்றும் தல

29 January 2019 11:50 am

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் விருப்பத்தை நிறைவேற்ற தல அஜித் தீர்மானித்துள்ளார்.

‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் இரண்டு திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார்.

இது தொடர்பாக போனி கபூர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘விஸ்வாசம்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தை ‘பே வியூ புரொஜக்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் போனி கபூர் தயாரிக்க வினோத்குமார் இயக்கவுள்ளார்.

2019ம் ஆண்டின் கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்கிற உத்வேகத்துடன் படக்குழுவினர் படத்தை தொடங்க இருக்கிறார்கள்.

போனி கபூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

ஒரு படத்தின் வெற்றிக்கு அந்த படத்தின் நடிகர் - நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிக முக்கியம்.

மறைந்த எனது மனைவி ஸ்ரீதேவியுடன் ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ திரைப்படத்தில் நடிக்கும் போது அஜித்குமாருடனான எனது நட்பு தொடங்கியது. அப்போது, தனது தாய்மொழியான தமிழில் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்றும், அதில் அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்றும் தனது விருப்பத்தை எதேச்சையாக அஜித்குமாரிடம் ஸ்ரீதேவி கூறியுள்ளார்.

‘நிச்சயமாக’ என்று கூறிய அஜித்குமார், சொன்ன வாறே எங்களை தமிழில் படம் தயாரிக்க அழைத்தார்.

ஸ்ரீதேவி உயிரோடு இருந்தபோதே நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு தற்போதுள்ள சூழ்நிலையில் சமூகத்துக்கு தேவையான படத்தை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

நாங்கள் தேர்ந்தெடுத்த கதையின் கருத்து மீது ஸ்ரீதேவி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.

அவருடைய கனவை நனவாக்கும் சிறிய முயற்சியில் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து இருப்பது என்னை பெருமிதத்தில் ஆழ்த்துகிறது.

தொழில் முறையான எங்கள் உறவு இந்த படத்துடன் இல்லாமல் இன்னொரு புதிய படத்திலும் தொடர இருக்கிறது.

அஜித்குமாரை வைத்து தயாரிக்க திட்டமிட்டிருக்கும் மற்றொரு படம் வருகிற ஜூலை தொடங்கி ஏப்ரல் 2020-ல் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

இயக்குனர் வினோத் அவருடைய முந்தைய படங்களின் மூலம் தனது பன்முகத் திறமையை காட்டிவிட்டார்.

அவருடைய தொழில் பக்தியும், எண்ணத்தில் இருப்பதை திரையில் கொண்டுவர எடுக்கும் சிரத்தையும் மிக.. மிக.. பாராட்டுக்குரியது.

கதை எந்த பின்னணியில் அமைந்தாலும், இசை அந்தப் பின்னணிக்கு வலுசேர்க்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் நான்.

அந்த வகையில் என்னை மிகவும் ஈர்த்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி.

தனது நடிப்பு திறமையால் நாடெங்கும் என்னற்ற ரசிகர்களை கொண்ட வித்யாபாலன் இந்தப் படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகிறார்.

அஜித்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும். வளர்ந்து வரும் நடிகைகளில் திறமையான ஒருவர் என்று கணிக்கப்படும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் படத்தின் மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகராக அறிமுகமாகிறார். இவர்களுடன் அர்ஜூன் சிதம்பரம், அசின் ராவ், சுஜித் சங்கர், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்டியா தரியாங்கு மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

நிரவ்ஷா ஒளிபதிவு செய்கிறார். கே.கதிர் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சியும், கோகுல் சந்திரன் படத்தொகுப்பையும் கவனிக்கிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.