ஶ்ரீசுக. எம்பிக்கள் கேட்கும் அமைச்சுப் பதவியால் ஐதேக.வில் குழப்பம்!
Monday, 24 Feb 2020

ஶ்ரீசுக. எம்பிக்கள் கேட்கும் அமைச்சுப் பதவியால் ஐதேக.வில் குழப்பம்!

16 December 2018 04:11 am

புதிய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணையவுள்ள ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் முக்கிய அமைச்சுப் பதவிகளை கேட்பதால் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

இதில் முன்னலையில் இருப்பவர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா ஆவார். நல்லாட்சி அரசாங்கத்தில் தான் வகித்த சிவில் விமான சேவை மற்றும் போக்குவரத்து அமைச்சை அப்படியே வழங்குமாறும் ஏனையவர்களுக்கும் அவர்கள் வகித்த அமைச்சை அப்படியே தருமாறும் நிமால் சிறிபால புலம்பியுள்ளார்.

ஒக்டோபர் 26ம் திகதி மஹிந்த பிரதமரான பின் அவரது பின்சென்று ஆதரவு வழங்கியதில் நிமால் சிறிபாலவிற்கு பாரிய பங்குண்டு. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மாநாட்டில் ரணிலை புதிய லிபரல்வாதி என்று கடுமையாக விமர்சித்தவர் நிமால். ஆனால் தற்போது ரணில் சிறந்தவர் என்றும் அவருடன் இணைந்து செயற்பட முடியும் என்றும் நிமால் தெரிவித்துள்ளார்.

எனினும் நிமால் சிறிபாலடி சில்வாவின் இந்த கோரிக்கைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான நபர்களை இணைத்துக் கொள்வதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்.

இவ்வாறு போனால் எஸ்.பி.திஸநாயக்க, திலங்க சுமதிபால போன்றவர்களும் இந்த அரசாங்கத்தில் இணைய நிபந்தனை முன்வைப்பர்.

எனினும் தம்மோடு இணைந்து கொள்ளும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு 5 அமைச்சுப் பதவியும் 2 இராஜாங்க அமைச்சுப் பதவியும் வழங்க முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.