மல்வானை அதிசொகுசு வீட்டு வழக்கில் இருந்து பசில், திருநடேசன் விடுதலையாகும் வாய்ப்பு
Saturday, 27 Nov 2021

மல்வானை அதிசொகுசு வீட்டு வழக்கில் இருந்து பசில், திருநடேசன் விடுதலையாகும் வாய்ப்பு

18 October 2021 09:34 am

பண மோசடி செய்து கம்பஹா மல்வானை பகுதியில் அதிசொகுசு வீடு நிர்மாணித்த குற்றச்சாட்டில் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திருநடேசன் ஆகியோர் விரைவில் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுவர் என கூறப்படுகிறது. 

குறித்த வீட்டினை வடிவமைத்த முதித் ஜயக்கொடி என்பவர் அரச தரப்பு சாட்சியாளராக சட்ட மா அதிபர் திணைக்களத்தால் பெயரிடப்பட்டுள்ளதால் இந்நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

முதித் ஜயக்கொடியின் வாக்குமூலத்தை வைத்தே மல்வான வீட்டிற்கு பசில் மற்றும் திருநடேசன் உரிமையாளர்கள் என FCID பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. 

இறுதியாக கம்பஹா மேல் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தான் இதற்கு முன்னர் FCID பிரிவிற்கு வழங்கிய அனைத்து சாட்சிகளும் பொய்யானவை என முதித் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 

பசில் மற்றும் நடேசனுக்கு எதிராக சாட்சி அளித்துக் கொண்டிருந்த முதித் தற்போது அவர்களுக்கு ஆதரவாக மாறியுள்ளார். 

அதனால் வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

நல்லாட்சி அரசாங்கம் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையே மல்வானை வீடு வழக்கு மாத்திரமே எஞ்சியுள்ளது. தற்போது அந்த வழக்கில் இருந்தும் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்படக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதால் இனி அவருக்கு எதிராக மோசடி வழக்குகள் எதுவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.