4000 கோடி பெறுமதி மாணிக்க கல்லுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா..!
Saturday, 25 Sep 2021

4000 கோடி பெறுமதி மாணிக்க கல்லுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா..!

27 July 2021 11:51 pm

உலகின் மிகப்பெரிய நட்சத்திர நீலகல் (sapphire)ஒன்று கிணறு தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி பகுதியில் உள்ள வீட்டில் கிணறு தோண்டிய தொழிலாளர்களால் இந்த மாணிக்க கல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த கல் சர்வதேச சந்தையில், சுமார் 100 மில்லியன் டொலர் வரை மதிப்பு கொண்டது எனவும் இலங்கை பெறுமதியில் 4000 கோடி ரூபாவிற்கும் அதிகம் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

நீலகல் சுமார் 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் கரட்ஸ் எடையைக் கொண்டுள்ளது. இந்த மாணிக்க கல்லுக்கு "Serendipity Sapphire”என்று பெயரிடப்பட்டுள்ளது. 

கொரோனா பொது முடக்கம் காரணமாக இலங்கையின் ரத்தின தொழில்துறை மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கும் சூழ்நிலையில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

"இது சிறப்பான நட்சத்திர நீலக்கல் தொகுப்பு. உலகத்திலேயே இதுதான் பெரியதாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்தக் கல் மீது அருங்காட்சியகங்களுக்கும், ரத்தினங்கள் சேகரிப்போருக்கும் ஆர்வம் ஏற்படும் என நினைக்கிறோம்," என்று இலங்கை தேசிய ரத்தினங்கள், ஆபரணங்கள் கூட்டுத்தாபன தலைவர் திலக் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கமகே என்பவரே இவ்வாறு பெரும் மதிப்புள்ள மாணிக்க கல்லுக்கு சொந்தக்காரர் என்பதுடன் அவர் தனது முழு பெயர் மற்றும் வதிவிடத்தை பாதுகாப்பு கருதி வௌியிடாமல் உள்ளார். 

இந்த கல்லை சுத்தப்படுத்தி சரியான பெறுமதியை கணக்கிட ஒரு வருடங்கள் ஆகும் என கமகே தெரிவித்துள்ளார்.