முயற்சி உடையார் இகழ்ச்சி அடையாளர்! விண்வௌிக்கு பறக்கும் 82 வயது பாட்டி!!
Saturday, 25 Sep 2021

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையாளர்! விண்வௌிக்கு பறக்கும் 82 வயது பாட்டி!!

19 July 2021 09:36 am

 

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது 'புளூ ஆரிஜின்' நிறுவனத்தின் விண்கலம் மூலம் ஜூலை 20-ல் விண்வெளிக்கு பறக்க உள்ளார். அவருடன் அமெரிக்காவின் முதல் பெண் விமான பயிற்சியாளரான 82 வயது வேலி பங்க் மற்றும் 18 வயது ஆலிவர் டேமன் ஆகியோரும் பயணிக்கின்றனர்.

உலக பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவர் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். அமேசான் சி.இ.ஓ., பொறுப்பிலிருந்து விலகியுள்ள அவர் தற்போது தனது விண்வெளி நிறுவனமான 'புளூ ஆரிஜின்' திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

விண்வெளி சுற்றுலா என்பது தற்போது வளர்ந்து வரும் துறையாக மாறியுள்ளது. அதிகளவில் இதில் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன. சில நாட்களுக்கு முன் பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் தனது விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்கலம் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்று திரும்பினார்.

இந்நிலையில் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு புறப்படுவதற்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20 அன்று மேற்கு டெக்ஸாசில் உள்ள ஏவுதளத்திலிருந்து நியூ ஷெப்பர்ட் விண்கலம் மூலம் இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு புறப்படுகிறார். 

அவருடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது மூதாட்டி வேலி பங்க், 18 வயது இளைஞரான ஆலிவர் டேமன் ஆகியோரும் செல்கின்றனர். வேலி பங்க் 1960-களிலேயே நாசாவின் கடினமான விண்வெளி வீரர்களுக்கான பயிற்சியில் வென்றவர். 

ஆனால் பெண்கள் பறக்கக் கூடாது என்ற அமெரிக்க ராணுவ விதிகள் காரணமாக அவர் கனவு நிறைவேறாமல் போனது. அதனை ஜெப் பெசோஸ் தற்போது நிஜமாக்க உள்ளார். இதனால் அவர் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்.

மேலும் இக்குழுவிலுள்ள ஆலிவர் டேமன் பணம் செலுத்தி செல்லும் முதல் நபர் ஆவார். இப்பயணத்திற்கான ஏலத்தில் 200 கோடி ரூபாய் செலுத்தி வென்ற நபர் குறிப்பிட்ட திகதியில் செல்ல முடியாத காரணத்தால், அடுத்த இடத்திலிருந்த டேமனுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது. விண்வெளிக்கு செல்லும் முதல் இளம் நபர் இவர் ஆவார். இவர்கள் புதிய ஷெப்பர்ட் விண்கலம் மூலம் 100 கி.மீ., உயரத்தில் உள்ள புவியின் வளிமண்டல எல்லைக்கோடான கார்மன் கோட்டை தாண்டி 6 கிலோ மீட்டர்கள் பயணிப்பார்கள். அங்கிருந்து பூமி பந்தையும், அடர் கருப்பான விண்வெளியையும் சில நிமிடங்கள் ரசித்துவிட்டு பூமிக்கு திரும்புவர்.