இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக இலங்கை முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள்
Saturday, 25 Sep 2021

இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக இலங்கை முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகள்

10 May 2021 12:55 pm

கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து இந்திய மக்களின் நல்வாழ்வுக்காக 2021 மே 8 ஆம் திகதியன்று இலங்கை முழுவதும் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளை நடத்தினர். இந்த கூட்டொருமைப்பாட்டு நிகழ்வுகளில் காணப்பட்ட பன்முகத்தன்மையின் வியாபகமானது இந்திய இலங்கை மக்களுக்கிடையிலான நட்புறவின் உண்மையான விஞ்ஞாபனமாக அமைந்திருந்தது.

2. பிரதமர் கௌரவ .மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் ஏற்பாட்டில் விஷ்வ ஆஷிர்வாத பூஜை’ நாடு முழுவதிலும் 17:30 மணி முதல் 18:30 மணி வரை பல்வேறு மதஸ்தலங்களிலும் இடம்பெற்றிருந்தது. ஸ்ரீ கங்காராமை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே கலந்து கொண்டார். புனித ரத்ன சூத்திரம்
மற்றும் ஜ்வாரா பிரித் பாராயணமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகளில் ஜப்பான், வியட்நாம் நாடுகளின் தூதுவர்களும் பல்வேறு நாடுகளின் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

3. இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்களில் ஒரே நேரத்தில் மகாமிருதுஞ்ஜய மகா யாகம் நடைபெற்றது. இவற்றில், பிரதமர் நரேந்திர மோடி 2015 மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு விஜயம் செய்தமை
நினைவில்கொள்ளப்படவேண்டிய விடயமாகும். அத்துடன் இந்நிகழ்வில் அவரின் குறியீட்டளவிலான பிரசன்னமாக அந்த விஜயத்தின் புகைப்படங்கள் இந்த பிரார்த்தனை நிகழ்வுகளின்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நகுலேஸ்வரம் ஆலய அதிகாரிகளைப் போலவே, கோண்டாவில் ஐயப்பன் மற்றும் மாவிட்டபுரம் கந்தசாமி கோயில்களின் அலுவலர்களும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு முகவரியிட்ட கூட்டொருமைப்பாட்டு கடிதங்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய கொன்சூல் ஜெனரல் திரு. எஸ். பாலச்சந்திரனிடம் கையளித்தனர்.

4. யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின் மக்களுக்கு ஒரு மணி நேர பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தன. சம நேரத்தில் வீடுகளிலும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

5. நாடளாவிய ரீதியில் முந்தைய வாரங்களில் நடைபெற்ற இத்தகைய பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் குறித்து 2021 மே 5 அன்று உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள தங்கள் சகோதர உறவுகளுக்காக உறுதியாக துணை நிற்பதற்கும், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியான காலத்தில் வெளிப்படுத்திய உணர்வின் எழுச்சிகள், ஆதரவு மற்றும் கவலை போன்றவற்றுக்காக இலங்கை சமூகங்களின் அனைத்து பிரிவுகளுக்கும்
உயர் ஸ்தானிகராலயம் தனது உண்மையான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றது.