நமக்கு தெரியாத சஜித்.. அனேகர்களுக்கு தெரியாத சஜித்... - விசேட தொகுப்பு
Saturday, 25 Sep 2021

நமக்கு தெரியாத சஜித்.. அனேகர்களுக்கு தெரியாத சஜித்... - விசேட தொகுப்பு

31 May 2021 07:09 am

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறித்து பலரும் பலவிதமான கதைகளை கூறுகின்றனர். நல்லது கூறுபவர்கள் இருப்பது போலவே தூற்றுபவர்களும் அதிகம் உள்ளனர். ஆளும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் அவர்களுடைய செயற்பாடுகள் பிழைத்துப் போகும் சந்தர்ப்பங்களில் எல்லாம் ' சஜித் இருந்திருந்தால் இதைவிட மோசம்' என பேசி சுதாகரித்துக் கொள்வார். உண்மையில் சஜித் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருந்தால் எப்படி நடக்கும் என்று அவர்களுக்கு தெரியுமாா? தெரியாது... 

குறைந்தது சஜித் பிரேமதாச என்பவர் யார் எப்படியான மனிதர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்று கூட அவர்களுக்கு தெரியாது. எனினும் அரசியல் ரீதியாக காணப்படும் உறவுகள் அடிப்படையில் சஜித் பிரேமதாஸ என்பவர் குறித்து மனதுக்குள் ஒருவிதமான தோற்றத்தை உருவாக்கிக் கொள்வர். சரியாக கூறினால் இவர்கள் எதிர்க்கட்சி பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் தாங்கள் இருக்கும் கட்சியின் தலைவரை பற்றி கூட தெரியாது. எனினும் தங்களுடைய தலைவருக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக கருதிக்கொண்டு சஜித் பிரேமதாச என்பவருக்கு இந்த விடயம் தெரியாது, செயல் திறனற்றவர்,  எவற்றையும் சரியாக செய்ய முடியாத நபர் என்று தங்களுக்குள்ளேயே பிழையான கருத்தை உருவாக்கி கொள்வர். அத்துடன் சஜித் எதனையும் செய்ய முடியாதவர் என்றவாறு வெளியில் பிரச்சாரம் செய்வார் சஜித்துக்கு எதிராக விமர்சனங்களை முன் வைப்பர். சஜித் இருந்திருந்தால் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா வந்து இருக்கும் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பலியாகி இருப்பார்கள் போன்ற கதைகளை அண்மைய காலங்களில் கேட்கக் கூடியதாக இருந்தது. 

பிரச்சினை ஒன்று உருவாக்கிய போது அப்படி, அல்லது சஜித் ஏதேனும் ஒரு விடயம் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பும் போது இல்லையேல் சஜித் அரசியல் ரீதியாக கடுமையான விவாதத்தை முன்வைக்கும் போது  நாம் முன்னர் கூறிய அந்த அரசியல் எதிராளிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு நடுநிலை என்று தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலர் எங்களுக்கு தெரியாத சஜித்தா என விமர்சிக்க தொடங்கி விடுவார். அதனால் இந்த கட்டுரை மூலம் சஜித் பிரேமதாச தொடர்பில் இதுவரையில் அறிந்திராத பகிரங்கப்படுத்தப்படாத அனேகமானவர்கள் தெரிந்து வைத்திருக்காத விடயங்கள் சிலவற்றை முன்வைக்கலாம் என எதிர்பார்க்கிறோம். 

சஜித் பிரேமதாச இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். இதற்கு முன்னர் எதிர்க்கட்சி தலைவர் என்றால் கடந்த சுமார் 25 வருடங்களாக நம்முடைய அனுபவத்தில் பதிந்தவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்தபடி இல்லையேல் தமது கட்சி தலைமையகத்திலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அல்லது மாதங்களுக்கு ஒரு முறை அல்லது சில மாதங்கள் கடந்து காலை வேளையில் பாராளுமன்றத்தில் கருத்துக்கள் சிலவற்றை முன்வைத்து மாலை வேளையில் ஆளும் அரசாங்கத்தின் நண்பர்களுடன் இணைந்து டீல் பேசிக்கொண்டு தேர்தல் நெருங்கும் போது வெளியில் வந்து தேர்தல் மேடைகளில் பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி செயற்படும் நபராகவே பார்த்திருக்கிறோம். ஆனால் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற கடந்த ஒன்றரை வருட காலத்தில் நாம் மேலே பெற்ற அனுபவங்களுக்கு எதிர்மாறான ஒரு எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டு நம் அனைவர் மத்தியிலும் புதிய மாற்றம் ஒன்றை விதைத்துள்ளார் என்றால் அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை.

சஜித் என்பவர் அசாதாரணமான வேகத்தில் வேலை செய்யக்கூடிய திறமையும் அதற்கு தேவையான அர்ப்பணிப்பையும் செய்யக்கூடிய மனிதராவார். சஜித் பிரேமதாச முதன் முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது குறுகிய காலத்தில் நாடு முழுவதும் விஜயம் செய்து சுமார் 140 பிரதான தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட மிக வேகமான நபர் ஆவார். கட்சிக்காரர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் தேர்தல் காய்ச்சல் பிடித்து வேகமாக செயல்பட்டுளளார் என்றே நினைத்தனர்.  ஆனால் சஜித் பிரேமதாச தனது தேர்தல் பிரச்சார உரைகளில் தனது எஞ்சின் மற்றும் டைனமோ இரண்டும் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அதிகாலை 4:00 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணி வரை தன்னால் அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களுக்காக பணியாற்ற முடியும் என்றும் கூறி வந்தார். மக்களை சந்திக்கும் போது தனக்கு பாரிய உத்வேகம் கிடைப்பதாகவும் மக்கள் மத்தியில் இருக்கும் போது தனக்கு ஆக்சிஜன் அதிகம் கிடைப்பதாகவும் தேர்தல் மேடைகளில் தெரிவித்தார். பொதுவாக இந்த கருத்துக்களை கேட்ட பலரும் சிரித்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 'இவனுக்கு பைத்தியம்' என திட்டினர். ஆனாலும் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து தான் எதிர்க்கட்சித் தலைவராக பதவி ஏற்ற நாள் தொடக்கம் இன்றுவரை தான் மேடைகளில் பேசிய அனைத்தையும் உண்மை என்பதை சஜித் பிரேமதாச தனது செயல்பாடுகளால் நிரூபித்துக் காட்டியுள்ளார். 

தேர்தலின் பின்னர் அடுத்த தேர்தல் வரும்வரை மக்களை மறந்து அலுவலகத்திற்குள் முடங்கிக் கிடக்கும் அரசியலை சஜித் பிரேமதாச செய்யவில்லை. தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் மிக விரைவாக அந்த தோல்வியில் இருந்து மீண்டு நாடு முழுவதும் பயணித்து மக்களின் குறைகளை கேட்கும் வேலைத்திட்டத்தை சஜித் ஆரம்பித்தார். பிளவுபட்டுக் கிடந்த கட்சி ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். புதிதாக கட்சியை கட்டியமைக்க தொடங்கினார். தொற்றுநோய் காலத்திலும் கட்சி பணிகளை முன்னெடுத்து தான் எதிர்கொண்ட முதலாவது பொதுத் தேர்தலிலேயே சுமார் 54 பாராளுமன்ற ஆசனங்களை பெற்று சஜித் பிரேமதாச தன்னை ஒரு சிறந்த தலைவராக நிரூபித்து காட்டியுள்ளார். சஜித் பிரேமதாசவிற்கு ஒன்றும் செய்யமுடியாது, சஜித் பிரேமதாச செயல்திறன் அற்றவர்,  புது கட்சி தொடங்கி அவரால் ஒன்றையும் சாதித்துவிட முடியாது என விமர்சனம் செய்தவர்களுக்கு எல்லாம் தேர்தலில் சஜித் தக்க பதிலடி கொடுத்தார். இன்று அவ்வாறு விமர்சித்தவர்கள் சஜித் பிரேமதாச தான் சரியான நபர் என்ற மனநிலைக்கு வந்து சஜித்துடன் இணைந்து செயல்படுவதை காண முடிகிறது. இதுவே சஜித்தின் குறுகிய கால சாதனை. 

பாராளுமன்றத் தேர்தலில் 54 ஆசனம் மாத்திரமே கிடைத்தது என்று கூறிக்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தை வெறுமனே சூடாக்கிக் கொண்டு சஜித் பிரேமதாச இருக்கவில்லை. எதிர்க்கட்சித் 'தலைவரின் நடமாடும் சேவை' என புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்தார். நாடு முழுவதும் உள்ள 332 பிரதேச செயலகங்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து அதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என சஜித் பிரேமதாச இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்தார். அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் குறுகிய காலத்தில் 75 பிரதேச செயலகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை ஊடாக விஜயம் செய்து அந்த பிரதேசங்களில் வாழும் மக்களின்  சகலவிதமான பிரச்சினைகளை கேட்டறிந்து அதில் பல பிரச்சனைகளுக்கு தீர்வினையும் வழங்கியுள்ளார். சில பிரதேசங்களில் வைத்திய பற்றாக்குறையை நிவர்த்தி செய்து வைத்தியசாலைக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளார். சில பிரதேசங்களில் காணப்பட்ட குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளார். சில பகுதிகளில் காணப்பட்ட நிர்வாக சிக்கல்களை உரிய இடத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுத்துள்ளார். சில பிரதேசங்களில் தனிப்பட்ட ரீதியில் வாழ்க்கையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நபர்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். கஷ்டப் பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்விக்கு உதவி செய்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்து கொடுத்துள்ளார். மக்கள் பிரச்சினைகளை முன் வைக்கும்போது அந்த பிரச்சனைகளை தன்னுடைய குறிப்புப் புத்தகத்தில் தானே எழுதிக் கொள்ளும் சிறந்த பழக்கம் சஜித் பிரேமதாசவிடமுள்ளது. அவ்வாறு எழுதிக்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்படும் கடிதங்களும் அதே குறிப்புப் புத்தகத்தில் இருக்கும். சஜித் பிரேமதாச அவற்றை பெற்றுக் கொண்டு அமைதியாக இருப்பதில்லை. தேவை ஏற்பட்டால் அந்த பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப அவர் தயங்கியதில்லை. 

நடமாடும் சேவை நடைபெறும் அதே சமயத்தில் தான் விஜயம் செய்யும் மாவட்டங்களிலுள்ள தேர்தல் தொகுதிகளில கட்சியின் முன்னேற்றம் தொடர்பிலும் அதன் அபிவிருத்தி தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். பாராளுமன்ற நாட்களில் அமர்வுகளில் தவறவிடாது கலந்து கொள்ளும் பழக்கம் இவரிடம் உள்ளதுடன் பாராளுமன்றத்தில் இடம்பெறும் அனைத்து கூட்டங்களிலும் கட்டாயமாக கலந்து கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளார். பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் நாட்களில் நாட்டு மக்களின் பிரச்சினைகளை சபைகள் முன்வைப்பதில் ஒரு போதும் பின் நின்றதில்லை. இதனால் ஆளும் கட்சியில் உள்ளவர்கள் பலரும் சஜித் எந்நேரமும் சபையில் பேசிக் கொண்டிருக்கிறார் என கிண்டல் செய்கின்றனர். ஆனாலும் மக்களுடைய பிரச்சினையை பேசும் உயரிய இடம் பாராளுமன்றம் என்பதால் சஜித் அவற்றை கணக்கில் எடுப்பதில்லை. தொடர்ந்து மக்களுக்கான குரலாக அவர் சபையில் ஒலித்துக் கொண்டு இருக்கிறார். 

இன்று முழு உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பில் முதல் முதலாக இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றியவர் சஜித் பிரேமதாச என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போது இந்த கொரோனா வைரஸ் இலங்கையில் பரவாமல் இருக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்தபோது அதனை அரசாங்க தரப்பில் இருந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உள்ளிட்டவர்கள் ஏளனம் செய்தனர். அன்று சஜித் கூறியதை கவனத்தில் எடுத்து நாட்டை முன்கூட்டியே முடக்கி வெளிநாட்டில் இருந்து பயணிகள் வருவதை தடை செய்திருந்தால் இலங்கை இன்று இந்த அளவு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்காது. பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கி இருக்காது. மக்களும் சிரமப்பட்டு இருக்க மாட்டார்கள். கொரோனா வைரஸினால் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாரகள். இவற்றை பலரும் மறந்து இருக்கலாம் ஆனாலும் ஞாபகப்படுத்த வேண்டியது எமது கடமையாகும். 

நாட்டு மக்களின் நன்மைக்காக சஜித் பிரேமதாச இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார். கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு நெருங்கிய நண்பர்கள் சஜித் பிரேமதாசவிடம் கூறினால்  அவர் சிரித்து விட்டு அடுத்த வேலைத்திட்டத்தில் களம் இறங்கி விடுவார். கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக தடுப்பு ஊசி ஏற்றும் திட்டம் நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட போது முதலில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தினால் அதன் பின்னர் தான் அதை செலுத்தி கொள்வதாக சஜித் பிரேமதாச பகிரங்கமாக அறிவித்து தடுப்பூசியை எடுத்துக் கொள்ளாது இருந்தார். மக்களைப் பற்றி சிந்தித்து தடுப்பூசி ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனாலும் அவர் மக்களை மறந்து விடவில்லை கொவிட் தடுப்பூசி ஊழல் நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து நாட்டுக்கு ஏற்படும் ஆபத்து கொவிட் தடுப்பூசியை முன்னுரிமை அளிக்கப்படாத விசேட தேவையுடையவர்கள் குறித்து ஊடக அறிக்கை ஊடாக குரலெழுப்பி வருகிறார். 

அரசியல் நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள போதும் தனது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுற்றாடல் தொடர்பில் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். ஏனைய அரசியல்வாதிகள் போன்று பணம் கொடுத்து பட்டம் வாங்கி அதனை பகிரங்கப்படுத்தி கொள்ளாது தன்னுடைய 52 வயதை மறந்து 25 தொடக்கம் 30 வயது உடைய மாணவர்களுடன் இணைந்து இணையத்தில் பட்டப்படிப்பை முன்னெடுத்து வருகிறார். இணைய வழியாக நடத்தப்படும் வகுப்புகளில் கலந்து கொள்கிறார். இதுவே அரசியல்வாதியாக இருந்து சமூகத்திற்கு அவர் முன்வைக்கும் முன்னுதாரண செயலாகும். 

சஜித் பிரேமதாச சாதாரண தரம் சித்தி அடையவில்லை, சஜித் பிரேமதாசவினால் கல்வி கற்க முடியாது, சஜித் பிரேமதாசவிற்கு ஆங்கிலம் பேசத் தெரியாது, சஜித் பிரேமதாச முட்டாள் என தூற்றியவர்களுக்கெல்லாம் சஜித் பிரேமதாச தக்க பாடம் புகட்டி உள்ளார். தன்னை விமர்சித்துக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் அந்த காலத்தில் 10 ஆங்கில வசனங்களை படித்துக் கொண்டால் சரளமாக ஆங்கிலம் பேசலாம் என தன் மீது விமர்சன கல்லை தூக்கி எறியும் எதிரிகளுக்கு கல்வி முன்னேற்றத்திற்கான அறிவுக் கண்ணை திறந்து வைத்தவர் சஜித் பிரேமதாச. 

சஜித் பற்றி இங்கு குறைந்த விடயங்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. சஜித் பற்றி சஜித்தின் நல்ல விடயங்கள் பற்றி சஜித்தின் நல்ல குணங்கள் பற்றி சஜித்தின் முன்னுதாரணமான செயற்பாடுகள் பற்றி சஜித்தின் முற்போக்கான அரசியல் அணுகுமுறைகள் பற்றி எழுதுவதற்கு இன்னும் பல லட்சம் விடயங்கள்  உள்ளன. எல்லாவற்றையும் இங்கே சொல்ல முடியாது. 

தன் மீது எவ்வளவு விமர்சனங்கள் செய்யப்பட்டாலும் அவற்றைப் பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் நாட்டுக்காக தன்னாலான சகல விடயங்களையும் அர்ப்பணிப்புடன துடிப்புடன் உணர்வுடன் செய்யக்கூடிய ஒரு தலைவரா, அரசியல்வாதியாக மக்கள் நல தொண்டனாக சஜித் பிரேமதாசவை காணமுடிகிறது. 

அத்துடன் சஜித் என்பவர் தான் நினைப்பது சொல்வது மாத்திரம் தான் சரி என விடாப்பிடியாக செயல்படக்கூடிய அரசியல் தலைவர் அல்ல. ஏதேனும் ஒவ்வாத கருத்துக்கள் நிலவும்போது அதனை செவிமடுத்து அதற்கு ஏற்றார் போல செயல்படக்கூடிய முற்போக்கு சிந்தனை கொண்டவர். 

சஜித் பிரேமதாச குறித்து இவ்வளவு தூரம் நாம் கூறியதால் அவர் மிகவும் நல்லவர், இந்த உலகத்தை மீட்க வந்த மீட்பர், குற்றங்களை செய்யாதவர், தவறே இழக்காதவர், பொய் ஊழல் செய்யாதவர் என்றெல்லாம் புகழ் பாட வரவில்லை. எம்மால் அப்படி சொல்லவும் முடியாது. ஆனால் சஜித் பிரேமதாச என்பவர் இந்த நாடு கண்ட மிகவும் துடிப்புமிக்க செயல் திறன் உடைய உண்மையான எதிர்க்கட்சி தலைவர் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். சஜித் அரசியலில் தன்னை இன்னும் பட்டை தீட்டிக் கொண்டால் ஆட்சி அவர் வசமாவது வெகு தொலைவில் இல்லை என்பதை கூறி வைக்க வேண்டும்.