நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து சம்பந்தன் விசேட செவ்வி
Saturday, 25 Sep 2021

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து சம்பந்தன் விசேட செவ்வி

8 November 2018 08:01 am

பதவியில் இருக்கின்ற ஒரு பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அத்துடன் ஒரு பிரதமரை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்பதாக சட்டபூர்வமாக பிரதமர் பதவியில் ஒரு வெற்றிடம் இருக்கவேண்டும். எனவே தற்போது அவ்வாறு பிரதமர் பதவியில் வெற்றிடம் இல்லாத சூழலில் புதிய பிரதமர் நியமனம் செய்யப்பட்டுள்ளமையினால் அது செல்லுபடியாகாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

எனவேதான் நாம் புதிதாக நியமனம் செய்யப்பட்டவரை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்திருக்கின்றோம். மேலும் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதனை அறிய நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இவ்வாறு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கான தீர்மானம் சபை கூடுவதற்கு முதல்நாள் நடைபெறும் கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை குறித்து வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அச் செவ்வியின் முழு விபரம் வருமாறு ,

கேள்வி : புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு விரோதமானது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஜனாதிபதி அது அரசியலமைப்புக்கு ஏற்றவகையில் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார். என்ன நடக்கின்றது?

பதில் : பதவியில் இருக்கின்ற ஒரு பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. பதவியில் இருக்கின்ற பிரதமர் அதிகார பூர்வமாக நீக்கப்படாமல் இருந்தால் புதிய பிரதமரை ஜனாதிபதி நியமனம் செய்ய முடியாது. ஒரு பிரதமரை ஜனாதிபதி நியமனம் செய்வதற்கு முன்பதாக சட்டபூர்வமாக பிரதமர் பதவியில் ஒரு வெற்றிடம் இருக்கவேண்டும். அவ்வாறு வெற்றிடம் இல்லாத சூழலில் புதிய பிரதமர் நியமனம் செய்யப்பட்டுள்ளமையினால் அது செல்லுபடியாகாது என்பது எங்களுடைய கருத்தாகும். அது மட்டுமன்றி புதிய பிரதமர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையை பெற்றவராக இருக்கவேண்டும். அந்த நம்பிக்கையை பெறுவதற்கு ஜனநாயக நாடுகளின் உள்ள முறைமையின்படி பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும். தன்மீது நம்பிக்கை உள்ளது அவர் பாராளுமன்றத்தில் வெ ளிப்படுத்தவேண்டும். அவர் பதவியேற்ற பின்னர் தாமதமில்லாமல் அந்த கருமம் நடைபெறவேண்டும். ஜனாதிபதி புதிய நியமனத்தை செய்த பின்னர் பாராளுமன்றத்தை இம்மாதம் 16 ஆம் திகதிவரை ஒத்தி வைத்திருந்தார். பல கட்சிகளுடைய கருத்தானது பாராளுமன்றம் விரைவில் கூட்டப்படவேண்டும் என்பதாகும். அதுவே எம்முடைய கருத்தாகும். அந்த கருத்தை நாங்கள் கடிதம் மூலமாக நாங்கள் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளோம்.

இந்த கோரிக்கையை முன்வைத்து பாராளுமன்றத்தில் 50 வீததத்துக்கு அதிகமான உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஒரு ஆவணத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு பேசியிருக்கின்றார். அந்த பேச்சுக்களின் அடிப்படையில் தற்போது பாராளுமன்றத்தை ஜனாதிபதி 14 ஆம் திகதி கூட்டுவதாக அறிவிததிருக்கின்றார். இதுதான் தற்போதைய நிலைமையாகும்.

கேள்வி : 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்போது உடனடியாக பெரும்பான்மையை காட்டவேண்டிய தேவை மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருக்கின்றதா?

பதில் : அதுதான் இடம்பெறவேண்டிய முறையாகும். ஆனால் என்ன நடைபெறும் என்று என்னால் கூற முடியாது. பாராளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்பதாக கட்சித் தலைவர்களின் கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெறும். அந்தக் கூட்டத்தின்போதுதான் 14 ஆம் திகதியின் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். அத்துடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர் கூடுகின்ற காரணத்தின் நிமித்தம் ஜனாதிபதியின் உரையும் நடைபெறவேண்டும். எனவே பாராளுமன்றத்தில் அன்றைய தினம் எவ்வாறு நடைபெறும் என்பது அதற்கு முன்னர் நடைபெறும் கட்சித் தலைவர் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்.

கேள்வி : பாராளுமன்றம் 14 ஆம் திகதி கூடும்போது அன்றைய தினமே ஒணர நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதா?

பதில் : இருக்க முடியாது என்று நான் சொல்லமாட்டேன். அது நடைபெறவேண்டியது அவசியம். காரணம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒரு பிரதமர் அவர் மீது நம்பி்க்கை குறித்த கேள்விகள் சந்தேகங்கள் பாராளுமன்றத்தில் ஏற்பட்டிருந்தால் அவர் தன் நம்பிக்கையை நிரூபிப்பது ஒரு ஜனநாயக கடமையாகும். பாராளுமன்றத்தில் அவர் நம்பிக்கையை நிரூபிக்க முமடியாது போனால் அவர் தொடர்ந்து பிரதமராக இருக்க முடியாது. எனவே முதல் கருமாக பாராளுமன்றம் தன்மீது நம்பிக்கையை வைத்திருக்கின்றது என்ற நிலைமையை அவர் உறுதி செய்யவேண்டும்.

கேள்வி இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்துமா?

பதில் சபாநாயகர் கட்சித் தலைவர் கூட்டத்தை அண்மையில் நடத்தியபோது பாராளுமன்றத்தை விரைவாக கூட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்த கட்சிகள் இந்த விடயத்தை முன்வைக்கலாம். இல்லாவிடின் இநதப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் போய்விடும்.

கேள்வி: அமைச்சர் பாராளுமன்றம் கூட்டப்பட்டவுடன் நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என்று கூறுகின்றனர். தேவையெனின் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தால் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் ?

பதில் : அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் கூறும் கருத்துக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. அந்த கருமத்தை சபாநாயகரும் கட்சித் தலைவர்களுமே தீர்மானிக்கவேண்டும். கடசித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும்போது அது சம்பந்தமாக நாங்கள் பேசுவோம்.

கேள்வி : பாராளுமன்றம் கூடியதும் இரண்டு தரப்பினரும் தமது பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என சபாநாயகரும் கட்சித் தலைவர்களும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தால் அது நடந்தேயாகவேண்டும். அப்படியா?

பதில் : முறைப்படி நடக்கவேண்டும். பாராளுமன்ற சம்பிரதாயங்களின்படி அது நடக்கவேண்டும்.

கேள்வி நம்பிக்கையில்லா பிரேரணையின்போது மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து வாக்களிக்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. அதற்கான காரணம்?

பதில் : இங்கு நாங்கள் நபர்களை பற்றி சிந்திக்கவில்லை. அது தொடர்பில் நாங்கள் அக்கறை கொள்ளவில்லை. நபர்களின் அடிப்படையில் நாங்கள் முடிவெடுக்கவில்லை. சில கொள்கைகளின் அடிப்படையில் மற்றும் அரசியல் சாசனத்தின் விதிகளின் அடிப்படையில் ஜனநாயகம் பேணிப்பாதுகாக்கப்படவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படும் நிலைமை இருக்கவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்கக்கூடாது. பதவி அல்லது பணம் கொடுத்து வாங்கக்கூடாது. இவ்விதமான சில கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளோம். நபர்கள் தொடர்பில் இங்கு நாம் அக்கறை கொள்ளவில்லை.

பதவியில் உள்ள பிரதமரை நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பில் அதிகாரம் இல்லை. பதவியில் உள்ள பிரதமர் சட்டபூர்வமாக நீக்கப்படாமல் இருந்தால் அவருக்கு பதிலாக இன்னுமொரு பிரதமர் நியமிக்கப்பட முடியாது. ஒரு நாட்டில் இரண்டு பிரதமர்கள் இருக்க முடியாது. இதுதான் அடிப்படையாகும். கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருப்போம்.

கேள்வி : பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் நீங்கள் அவரை சந்தித்தீர்கள். எதற்காக? என்ன பேசினீர்கள்?

பதில் : அவர் என்னை சந்திக்கவேண்டும் என்று ஒரு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி சந்தித்தேன். எம்முடைய ஆதரவை தனக்கு தருமாறு அவர் கோரினார். நான் அது தொடர்பில் முடிவெடுக்க முடியாது என்று கூறினேன்.

கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி எடுக்கவேண்டிய முடிவு என்று கூறினேன். ஆனால் இந்த விடயத்தை நான் எம்.பி. களுக்கு கூறுவதற்கு முன்பதாக மஹிந்தவிடம் சில விடயங்களை கூறினேன். அதாவது தீர்வு சம்பந்தமா நாங்கள் பல முயற்சிகளை எடுத்துள்ளோம். உங்கள் ஆட்சிக்காலத்திலும் பல முயற்சிகள் நடைபெற்றன. பேச்சுக்கள் நடைபெற்றன.

ஆனால் கருமங்கள் வெற்றியடையவில்லை. எனவே அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக ஒரு எழுத்துமூல வரைபை தருமாறு நான் கோரினேன். 13 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்தவிடயம் குறித்த பல பேச்சுக்கள் நடத்தப்பட்டன. தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டன.

குழுக்களின் அறிக்கைகளும் வந்தன. பல ஆவணங்கள் இது தொடர்பில் உள்ளன. எனவே இதுவொரு புதிய விடயமல்ல. அதனால் அரசியல் தீர்வு தொடர்பில் உங்கள் நிலைப்பாட்டையும் அதனை எவ்விதமான நடைமுறைப்படுத்தப்போகின்றீர்கள் என்ற விடயத்தையும் எழுத்துமூலம் தாருங்கள் என்று கூறினேன். ஒரு கால வ.ரம்புக்குள் இதுநடக்கவேண்டும். அதனை குறிப்பிட்டு எழுத்துமூல ஆவணத்தை தருமாறு கோரினேன்.

கேள்வி : அதற்கு அவர் என்ன கூறினார்?

பதில் : நான் விரைவில் ஒரு தேர்தலை நடத்தி அதில் மக்கள் ஆணையை பெற்ற பின்னர்தான் அதனை செய்யலாம். அதுவரை நான் எதையும் திடமாக செய்ய முடியாது என்று மஹிந்த கூறினார். ஆனால் எங்களுக்கு எழுத்துமூல உறுதி தேவை என்று கூறினேன். நாங்கள் பல தடவைகள் தலைவர்களின் கேட்டு அது நடைபெறவில்லை. எனவே இது எமக்கு அவசியம் என்று கூறினேன். எழுத்துமூலம் வரைபு தராவிடின் கஷ்டம் என்று கூறினேன். அப்போது அவர் மறுபடியும் பேசுவோம் என்று கூறினார். மறுபடியும் பேசவில்லை.

கேள்வி : தற்போதைய நெருக்கடியின் பின்னால் சர்வதேச சமூகத்தின் கரங்கள் இருப்பதாக கருதுகின்றீர்களா?

பதில் : நான் தலையீடுகள் உள்ளதாக அவ்வாறு கருதவில்லை. இலங்கை சர்வதேச ரீதியில் பல ஒப்பந்தங்கள் சாசனங்களில் உள்ளடங்கப்பட்டுள்ளது. எனவே ஜனநாயக கோட்பாடு மீறப்பட்டால் சர்வதேச சமூகம் இதுபற்றி கருத்துக்கூறுவது சாதாரண விடயம். அது புதிய விடயமல்ல. அதனை தலையீடு என்று கூற முடியாது. அது அவர்களின் கடமையாகும்.

கேள்வி : நம்பிக்கை வாக்கெடுப்பில் நீங்கள் மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தும் அவர் வெற்றிபெற்றால் என்னவாகும்?

பதில் : எம்மை பொறுத்தவரை எமது மக்களின் பாதுகாப்பு உரிமைகளைபேணுவதற்காக நாங்கள் எந்த சிங்கள தலைவர்களுடனும் பேசுவோம். யார் பிரதமராக வந்தாலும் அவர்களுடனும் அவர்களுடைய அரசாங்கத்துடனும் பேச்சு நடத்துவோம். அதற்கு மேலதிகமாக நான் எதனையும் கூற முடியாது.

கேள்வி : ஜே.வி.பி. யின் தலைவரை சந்தித்து பேச்சு நடத்தினீ்ரகளே ?

பதில் : இந்தவிடயத்தில் அவர்களுடைய கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றித்துப் போகின்றது. அரசியல்சாசனம் மீறப்பட்டுள்ளது. ஜனநாயகம் மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளார்கள்.

கேள்வி : அமெரிக்க தூதுவரையும் சந்தித்தீர்களே?

பதில் : அவர் புதிய தூதுவர். நிலைமைகள் குறித்து ஆராய்ந்தோம். என்ன காரணத்துக்காக கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்தோம் என அவருக்கு விளக்கினேன். அவரும் முக்கியவிடயங்களை குறிப்பிட்டார். சர்வதேச விதிமுறைகளை மீறி இலங்கை செயற்பட முடியாது. அப்படி நடந்தால்நாங்கள் உதவிகளை இழக்க நேரிடலாம். எனவே நாங்கள் அரசாங்கத்துக்கு இவற்றை எடுத்துக்கூறுவோம் என்று கூறினார்.

கேள்வி : உங்கள் கட்சியை சேர்ந்த வியாழேந்திரன் எம்.பி. மஹிந்த பக்கம் சென்றுள்ளாரே?

பதில் : அவர் ஒரு புதிய பாராளுமன்ற உறுப்பினர். அவர் எங்களின் பங்காளிக் கட்சி ஒன்றினால் நியமிக்கப்பட்டவர். அவருடைய நடத்தை சம்பந்தமாக எனக்கு சமீப காலத்தில் சந்தேகம் ஏற்பட்டது. அதனை அவரின் தலைவருக்கு நான் இதனை எடுத்துக்கூறினேன். இவரின் போக்கை அவதானிக்குமாறு எடுத்துக்கூறினேன். அவர் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்தார்.

அவர் கட்சி மாறிய அன்றுதான் நாட்டுக்கு திரும்பியிருந்தார். அவருடைய கட்சித் தலைவர் அவருடன் தொடர்புகொள்வதற்கு பல முயற்சிகளை எடுத்திருந்தார். ஆனால் அது வெற்றிபெறவில்லை. தொலைபேசி அழைப்புக்கு பதில் கிடைக்கவில்லை. அந்த நேரம் அவர் மாறியிருக்கின்றார். அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.

கேள்வி : ஜனாதிபதி தலைமையிலான தீபாவளி நிகழ்வில் நீ்ங்கள் சற்று காரசாரகமாக பேசியிருந்தீர்கள். என்ன நடந்தது?

பதில் : நான் காரசாரமாக பேசவில்லை. சொல்லவேண்டியதை சொன்னேன். திடமாக உறுதியாக சொன்னேன். இந்த மாற்றங்கள் நடைபெற்ற பின்னர் ஜனாதிபதியை முதல் முதலாக சந்தித்தேன். அவருக்கு முன்பதாக என்னை பேசுமாறு கூறினார்கள். அப்போது அவரிடமிருந்து சில பதில்களை பெறுவதற்காக சொல்லவேண்டிய விடயங்களை கூறினேன்.

கேள்வி: நீங்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்த்த பதில் திருப்தியாக இருந்ததா?

பதில் : மிகவும் திருப்தியாக இருந்தது. தமிழ் மக்களின் வாக்குகள் ஊடாகவே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கூறியது நூறுவீதம் உண்மை என்று கூறினார். அதனை மறுக்கவில்லை என்று கூறினார்.

ஒரு தேசியப்பிரச்சினை நாட்டில் உள்ளது. நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. அது தீர்க்கப்படவேண்டும். அடுத்த தீபாவளி தினத்துக்கு முன்பதாக தீர்க்கப்படவேண்டும். அதற்கு என்னால் இயன்ற அத்தனையும் நான் செய்வேன். அதனை நான் கைவிடவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதி சென்றதைவிட நான் சென்று வந்துள்ளேன். பல கருமங்களை செய்திருக்கின்றேன். இந்தவிடயம் சம்பந்தமாக நான் கடமையை செய்வேன். அதனை அவர் உறுதியாக சொன்னார். பேச்சு திருப்தியாக இருந்தது.

கேள்வி: அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நீங்கள் பல தடவைகள் அரசாங்க தரப்புடன் பேசினீர்கள். தற்போது விடுதலை கிடைக்கும் சாத்தியம் தெரிகின்றதா?

பதில் : இது தொடர்பில் பல தடவைகள் பேசப்பட்டது. நேற்று முன்தினமும் பேசினேன். அது சம்பந்தமாக விரைவில் சில நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் கூறினார்.

கேள்வி : தற்போது இதில் அவசரம் காட்டப்படுகின்றதா?

பதில் : இது விடயம் குறித்து முடிவெடுக்கப்படும் நிலையே காணப்பட்டது. 10 தினங்களுக்கு முன்னரும் இது குறித்து பேசப்பட்டது. அப்போது ஜனாதிபதி சில விடயங்களை குறிப்பிட்டிருந்தார். தற்போது சில தினங்களில் சாதகமான முடிவை எடுப்பதாக அவர் கூறினார்.

கேள்வி : தற்போதைய ஜனாதிபதிக்கு தமிழ் பேசும் மக்களின் ஆதரவளித்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் போக்கை கொண்டிருந்தது. ஒரு நியாயமான தீர்வை பெறவே இது செய்யப்பட்டது. தற்போது அந்த நம்பிக்கையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதா?

பதில் : ஏமாற்றப்பட்டுவிட்டதாக நான் சொல்லமாட்டேன். ஆனால் இதுவரையில் அந்த கருமம் நிறைவேற்றப்படவில்லை. அதனால் நாங்கள் அவற்றைநிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அதனை நான் வலியுறுத்தினேன்.

கேள்வி : எனினும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிக்கல் ஏற்பட்டுவிட்டதா?

பதில் : ( சிந்திக்கின்றார்) தமிழ் மக்கள் சந்தேகப்படுகின்றார்கள் என்று நான் கூறமாட்டேன். ஆனால் கருமம் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது. எல்லாத் தலைவர்களையும் ஒன்றிணைத்து இந்த கருமத்தை கையாளவேண்டியது அவசியம். கூடியளவுக்கு எமது கொள்கைகளை நாம் விட்டுக்கொடுக்காமல் இதனை சாதிக்கவேண்டும். மாறாக எதிர்ப்பை வளர்த்து எதனையும் பெற முடியாது. அதனால் எவருடேனும் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும்.

கேள்வி : பாராளுமன்ற தேர்தல் ஒன்றுக்கு செல்ல வேண்டும் என்ற கருத்து வெ ளியிடப்படுகின்றது. கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

பதில் : அதனைப்பற்றி நாங்கள் முடிவெடுக்கவில்லை. நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்படவேண்டும் என்றால் 150 எம்.பி. க்கள் கைச்சாத்திட்டு யோசனை வரவேண்டும். அது தொடர்பில் நாங்கள் முடிவெடுக்கவில்லை. உரிய நேரத்தில் பரிசீலித்து முடிவெடுப்போம்.

கேள்வி : அடுத்த மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார்?

பதில் : அது தொடர்பில் நாங்கள் முடிவெடுக்கவில்லை. உரிய காலத்தில் தேவையான முடிவை எடுப்போம்.

கேள்வி : வடக்கில் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிக்கட்சியை ஆரம்பித்திருக்கின்றார். இது குறித்து?

பதில்: அவர் நாட்டின் பிரஜை. புதிய கட்சியை தொடங்குவதற்கு முன்பதாக எமக்கு எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. சென்றமுறை மாகாண சபை தேர்தலில் எங்கள் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டவர். அவர் போட்டியிட்டபோது ஒவ்வொரு வேட்பாளரும் தமக்கான விருப்புவாக்கில் அவருக்கும் ஒன்றை இட பிரசாரம் செய்யவேண்டும் என்று கட்சியினால் கட்டளையிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.நான் நேரடியாக எல்லா வேட்பாளர்களுக்கும் அதனை கூறினேன்.

நியமனப் பத்திரம் வழங்கப்பட்ட அன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் எல்லா வேட்பாளர்களும் வந்திருந்தனர். வேட்பாளர்களின் மூன்று விருப்பு வாக்குகளில் முதலமைச்சர் வேட்பாளருக்கு கட்டாயம் ஒன்று வழங்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டேன். அந்த கட்டளையை 90 வீதமானவர்கள் நிறைவேற்றினர். அதன்மூலமாக வெற்றிபெற்றவர்தான் விக்கினேஸ்வரன். இன்று ஒரு புதிய கட்சியை ஆரம்பித்திருக்கின்றார். கட்சியை ஆரம்பிக்கப்போகின்றமை தொடர்பாக எவ்வித அறிவித்தலையும் எமக்கு தரவில்லை. பார்ப்போம்.

கேள்வி : நீங்கள் உருவாக்கிய முதலமைச்சர் அல்லவா?

பதில் : அவர் உண்மையிலேயே பதவிக்காலம் முடியும் வரை இவ்விதமான கருமத்தை செய்யவில்லை. பதவிக்காலம் முடிந்த பின்னர்தான் இதனை செய்துள்ளார். பதவிக்காலத்துக்குள் தமிழ் மக்கள் சார்பாக தான் எதனை அடைந்தேன் ? என்று கூறியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். மற்றவர்கள் மீது பலியை சுமத்தி தன்னுடைய பலவீனங்களை தன்னுடைய செயலின்மையை அவர் மறைப்பதற்கு முயற்சித்திருக்கின்றார்.

கேள்வி : உங்களையும் விமர்சித்துள்ளார்?

பதில் : என்னை விமர்சிப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளது. நான் ஒரு அரசியல்வாதி. எனவே அந்த உரிமையை அவர் மறுக்க இயலாது. ஆனால் அவர் முதலமைச்சர் பதவிக்காலம் முடிவடைந்து பதவியிலிருந்து விலகியபின்னர் முதலமைச்சராக தமிழ் மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுத்தேன் என்றும் தன்னுடைய கடமையை எவ்வாறு நிறைவேற்றினேன் என்றும் அவர் கூறியிருக்கவேண்டும். அது கட்டாய தேவையாகும். அவர் அதனை செய்யவில்லை. அவற்றை மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி சுமத்தியுள்ளார். நான் அதனை பற்றி தற்போது பேசவேண்டிய தேவையில்லை. பேச விரும்பவுமில்லை. ஆனால் பேசவேண்டிய நேரத்தில் நாங்கள் பேசுவோம்.

(நேர்காணல் ரொபட் அன்டனி - நன்றி வீரசேகரி)