கொரோனா மரண பயத்தால் ஒன்றரை வருடங்கள் வீட்டைவிட்டு வெளியே வராத அதிசய குடும்பம்!
Saturday, 25 Sep 2021

கொரோனா மரண பயத்தால் ஒன்றரை வருடங்கள் வீட்டைவிட்டு வெளியே வராத அதிசய குடும்பம்!

20 July 2021 09:59 am

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜோலு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயது விவசாய தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 1 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு கொரோனா தொற்று பரவியபோது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கினார்.

அக்கம்பக்கத்தினர் யாருடனும் பேசுவதில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்து விடுவோமோ என்ற பயத்தில் வீட்டைக்கூட திறக்காமல் இருந்துள்ளனர்.

அவ்வப்போது அவருடைய மகன் மட்டும் வீட்டில் இருந்து வெளியே வந்து ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிச்செல்வது வழக்கம். வீட்டில் இருந்து வெளியே வரும் அவரது மகனும் யாருடனும் பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு முதல்-மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கிராம பஞ்சாயத்து செயலாளர் மற்றும் ஊழியர்கள் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு முதல்-மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு தருமாறும் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கொரோனா வந்துவிடும் என்பதால் வெளியே வர முடியாது என திட்டவட்டமாக கூறி கதவை திறக்க மறுத்து விட்டனர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர், அதிகாரிகளிடம் கூறுகையில், கடந்த 1½ வருடமாக அவர்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டுக்குள் சென்ற அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள்ளேயே முடங்கிய 5 பேரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டனர். இதையடுத்து அவர்களை சிகிச்சைக்காக வலுக்கட்டாயமாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

கொரோனாவுக்கு பயந்து 1½ ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.