மஞ்சள் செய்கையில் ஈடுபடுவது எப்படி? சுயதொழில் செய்வோம் வாங்க
Friday, 23 Oct 2020

மஞ்சள் செய்கையில் ஈடுபடுவது எப்படி? சுயதொழில் செய்வோம் வாங்க

22 September 2020 09:38 pm

மஞ்சள் ஒரு உலர் வலயப்பயிர் ஆகும். தண்டில் உள்ள முளையிலிருந்து வளர்ந்து, மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.

மஞ்சளைப் பொறுத்தவரை இருபதுக்கும் அதிகமான இனங்கள் உள்ளது.
நடுகைக்கு ஏற்ற இனத்திணை தெரிவுசெய்து வைகாசி முதல் ஆனி வரையிலான காலப்பகுதியில் நடவு செய்ய வேண்டும்.

நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருவாட்டி மண். மஞ்சள் பயிர்ச் செய்கைக்கு ஏற்றது.

கடைசி உழவின் போது ஏக்கருக்கு 4 டன் மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் கலந்து உழவு செய்ய வேண்டும்.

பின்பு நான்கு அடி அகலத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் நீளத்தை இடத்துக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கருக்கு 750 கிலோ விதை கிழங்குகள் தேவைப்படுகின்றன.

நடும் பொழுது 20 சென்டிமீட்டர் இடைவெளியில் 4 சென்டிமீட்டர் ஆழத்தில் நடவேண்டும்.

நடுவதற்கு முன்பும், நட்டு மூன்றாம் நாளின் பின்பும் பயிர் சிறிது வளரும் வரை உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பின்பு மண்ணின் தன்மைக்கு ஏற்றாற் போல் 7 நாட்களில் ஒரு தடவை வீதம் நீர் பாய்ச்ச வேண்டும்

நடவு செய்த 30வது நாளில் முதல் களையும், பின் 50, 120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்க வேண்டும்.

மேலும் உரம் இடும்போது மண் அணைக்க வேண்டும்.

எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் முற்று முழுதாக இயற்கையாகவே உற்பத்தி செய்து அறுவடை செய்ய முடியும்.

பயிர் வளர்ப்பு ஊக்கியான ஜீவாமிர்தத்தையும். இயற்கை முறையிலான கிருமிநாசினி களையும் பயன்படுத்தலாம்.

பயிர் மஞ்சள் நிறமாக மாறுதல், சாய்தல், உலர்ந்து விடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழி தோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 10 -12 டன் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் 3-4 டன் வரை கிடைக்கும்.

கிழங்குகளை சுத்தமான நீரில் தான் வேக வைக்க வேண்டும். கிழங்குகளைச் சரியான அளவு வேக வைக்க வேண்டும். அதிகமாக வேக வைத்தால் நிறம் மங்கிவிடும். குறைவாக வேக வைத்தால் கிழங்குகள் காயும் போது நொறுங்கி உடைந்து விடும்.

நீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் சில குறிப்புகள் மூலம் கண்டறிலாம்.

1 நல்ல மஞ்சள் வாசனை வீசும்.
2 நீர் கொதிக்கும் போது நுரை தள்ளும்.
3 கிழங்கினை இலேசாக அமுக்கும்போது நெகிழ்ந்து கொடுக்கும்.
4 வெந்த கிழங்கினுள் சிறு குச்சியினை நுழைத்தால் அது எளிதில் உள்ளே செல்லும்.
5 மஞ்சளை உடைத்துப் பார்த்தால் உட்பாகம் செம்மஞ்சள் நிறம் மாறி. மஞ்சள் நிறமாக இருக்கும்.

இந்த சமயத்தில் கிழங்குகளை எடுத்து ஆறவிட வேண்டும்.

பின்பு வெயிலில் காய வைக்க வேண்டும். மழையில் நனைய விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு முறை கிளறி விட்டு சீராக காயவிட வேண்டும். தினமும் மாலையில் கிழங்குகளை ஒன்றாகக் குவித்து மூடிவிடவேண்டும்.

சுமார் 10 நாட்களில் மஞ்சள் காய்ந்துவிடும். கிழங்குகள் உறுதியாக மாறிவிடும்.