பங்காளி கட்சிகளின் முகத்தில் அடிப்பது போல கடிதம் அனுப்பிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
Saturday, 27 Nov 2021

பங்காளி கட்சிகளின் முகத்தில் அடிப்பது போல கடிதம் அனுப்பிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

18 October 2021 05:57 pm

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் குறித்த உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவாரத்தை நடத்த நேரம் ஒதுக்கித் தர முடியாது என ஆளும் பங்காளி கட்சிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் அதிரடியாக அறிவித்துள்ளார். 

வத்தளை - கெரவலப்பிட்டி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கிய ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு 10 பங்காளிக் கட்சிகளின் தலவைர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தன.

எனினும் இந்த வார இறுதியில் ஆளுங்கட்சி சந்திப்பிற்கு மாத்திரம் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அரசியல் மற்றும் அரசின் கொள்கைகள் சம்பந்தப்பட்ட விடயங்களை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் பேசுமாறு கோட்டாபய ராஜபக்ஷ பங்காளிக் கட்சிகளுக்கு கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளார். 

முன்னதாக, யுகதனவி மின் நிலையத்தின் விற்பனை குறித்து பேச்சு நடத்த நேரம் ஒதுக்குமாறு கோரி அரசின் 11 பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தன.

அந்தக் கடிதத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள  கோட்டாபய, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் பிரதமரிடமும், நிதியமைச்சரிடமும் பேச்சு நடத்தவேண்டுமென குறிப்பிட்டுள்ளார். 

யுகதனவி மின் நிலையத்தின் 40 வீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து அரசின் பங்காளிக்கட்சிகள் செப்டெம்பர் 23 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தியிருந்தன.

அந்த சந்திப்பில் திருப்திகரமாக இல்லை என்பதால் ஜனாதிபதியை சந்தித்துப் பேச பங்காளி கட்சிகள் தீர்மானித்திருந்த நிலையில், ஜனாதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்குள் நிலவுகின்ற பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சு நடத்தும் வகையில் ஆளுங்கட்சியிலுள்ள தலைவர்களுடன் இவ்வார இறுதியில் சந்திப்பொன்றிற்கும் கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.