பதியூதின் வீட்டுக்கு மண்ணென்ணை வந்தது எப்படி? லைட்டர் யாருடையது? பதியூதினின் மாமியாருக்கும் சிக்கல்!
Saturday, 25 Sep 2021

பதியூதின் வீட்டுக்கு மண்ணென்ணை வந்தது எப்படி? லைட்டர் யாருடையது? பதியூதினின் மாமியாருக்கும் சிக்கல்!

28 July 2021 02:53 pm

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதினின் பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள அதிசொகுசு வீட்டிற்குள் மண்ணென்ணை வந்தது எப்படி என்று பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

பதியூதின் வீட்டில் பணிபுரிந்த 16 வயது டயகம சிறுமி மண்ணென்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக தற்போது கூறப்பட்டுள்ளது. 

குறித்த சிறுமி தங்கியிருந்த அறையில் இருந்து மண்ணென்ணை போத்தலும் தலையணைக்கு அடியில் இருந்து லைட்டரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்ட ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் அறிவித்தார். 

மேலும் வீட்டுக்கு மண்ணென்ணை எப்படி வந்தது என ரிசாத் பதியூதினின் மனைவியினது தாயிடம் விசாரணை செய்த போது வீட்டில் பணிபுரியும் சாரதி ஒருவரே மண்ணென்ணை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் குறித்த சாரதியிடம் இதுகுறித்து வினவியபோது, தான் அந்த வீட்டிற்கு எக்காரணத்திற்காகவும் மண்ணென்ணை வாங்கி வரவில்லை என சாரதி மறுத்துள்ளார். 

அதனால் சிறுமியின் மரணம் தொடர்பான சந்தேகம் மேலும் வலுப்பெற்றுள்ளதுடன் பொய்கூறிய ரிசாத் பதியூதினின் மாமியாரும் பொலிஸார் வலையில் சிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் சிறுமியின் அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட லைட்டர் யாருடையது? அங்கு அது எப்படி வந்தது? அதுவும் தலையணைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது ஏன்? சிறுமி தீ வைத்துக் கொண்டிருந்தால் அந்த நேரத்தில் லைட்டரை தலையணைக்கு அடியில் அவர் மறைத்து வைத்திருக்கக் கூடுமா? என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.