ஞாயிறு தாக்குதல் திட்டத்தை இந்திய புலனாய்வு பிரிவு சரியாக தெரிந்து வைத்திருந்ததன் காரணம் வௌியாகியது!
Saturday, 25 Sep 2021

ஞாயிறு தாக்குதல் திட்டத்தை இந்திய புலனாய்வு பிரிவு சரியாக தெரிந்து வைத்திருந்ததன் காரணம் வௌியாகியது!

24 July 2021 05:06 pm

இலங்கையில் இடம்பெற்ற ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை இந்தியா முன்கூட்டியே அறிந்துகொண்டமைக்கு பெகாசஸ் என்ற மென்பொருள் காரணம்  என தெரிவிக்கப்படுகிறது. 

தாக்குதல் நடத்தப்படும் திகதி, நேரம், நபர்கள், இடம்  என அனைத்தையும் இந்திய புலனாய்வு பிரிவினர் சரியாக கூறியிருந்தனர். 

இந்நிலையில் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி சஹரானின் அல்லது அந்த குழுவின் முக்கியஸ்தர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் அதன் ஊடாகவே இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு இந்திய புலனாய்வு பிரிவால் சரியான தகவல்களை வழங்க முடிந்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த பெகாசஸ் மென்பொருள் விடயம் இந்திய அரசியலில் தற்போது பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி எதிர்கட்சி முக்கிய தலைவர்களில் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக தெரிவித்து பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பெகாசஸ் மென்பொருள் காரணமாக உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர்; தெருக்களில் பாதுகாப்பாக நடக்கின்றனர் என மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ குழுமம் கூறியுள்ளது.

மேற்காசியாவின் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., குழுமம், பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. இந்த மென்பொருள் வாயிலாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உட்பட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பல நாடுகளை சேர்ந்தவர்களின் மொபைல் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக என்எஸ்ஓ குழுமத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: பெகாசஸ் தொழில்நுட்பம் உள்ளதால், உலகம் முழுவதும் லட்சகணக்கான மக்கள் நிம்மதியாக தூங்குகின்றனர். தெருக்களில் பாதுகாப்பாக நடக்கின்றனர். இந்த தொழில்நுட்பம் உலகெங்கிலும் உள்ள புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு குற்றங்கள், பயங்கரவாத சம்பவங்களை தடுக்கவும், விசாரிக்கவும் உதவுகிறது. இதே போன்ற தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் விசாரணை அமைப்புகள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு உதவும்.

என்எஸ், மற்றும் அதேபோல் உலகில் உள்ள சைபர் தொழில்நுட்ப நிறுவனங்கள், சைபர் உளவுத்துறை கருவிகளை அரசுகளுக்கு அளிக்கின்றன. இதற்கு, சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி அனுப்பும் செயலிகள் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க உரிய வழிமுறைகள், விசாரணை அமைப்புகளிடம் இல்லாததே காரணம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் இயக்குவது இல்லை. எந்த தரவுகளையும் நாங்கள் சேமிப்பது கிடையாது. பாதுகாப்பான உலகத்தை உருவாக்க எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.