ரிசாத் குடும்பத்திற்கு 2- 10 வருட சிறை, சிறுமியின் பெற்றோருக்கு 20 வருட சிறை?
Saturday, 25 Sep 2021

ரிசாத் குடும்பத்திற்கு 2- 10 வருட சிறை, சிறுமியின் பெற்றோருக்கு 20 வருட சிறை?

23 July 2021 10:16 pm

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட சிறுமி அங்கு உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தப்பட்டு உள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

துன்புறுத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 2 தொடக்கம் 10 வருட சிறை தண்டனை விதிக்கக் கூடிய சட்ட ஏற்பாடுகள் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதாரனபதிரன தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் 308 ஆம் இலக்க சட்டத்தின் படி இவர்களுக்கு தண்டனை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த சிறுமியை விற்பனை செய்யும் நோக்கத்தில் பணிக்கு அமர்த்தியதாக பெற்றோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கக் கூடிய சட்ட ஏற்பாடுகளும் உள்ளதாக அவர் கூறினார்.

உயிரிழந்த சிறுமியின் தாயினுடைய கருத்துப்படி கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக முகவரின் மூலம் ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு சிறுமியை பணிக்கு அமர்த்தியுள்ளமை ஒருவகையில் இந்த குற்றத்திற்கு ஒப்பானது என அவர் தெரிவித்துள்ளார்.