உர வகை, கிருமிநாசினிகளின் விலை இரண்டு மடங்கு அதிகரிப்பு! விவசாயிகள் திண்டாட்டம்!!
Wednesday, 16 Jun 2021

உர வகை, கிருமிநாசினிகளின் விலை இரண்டு மடங்கு அதிகரிப்பு! விவசாயிகள் திண்டாட்டம்!!

9 May 2021 01:02 pm

நாட்டின் சில பாகங்களில் விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் உர வகைகள் மற்றும் கிருமிநாசினிகளின் விலை அதிகரித்துள்ளதாக விவசாசியகள் ககவலை வௌியிட்டுள்ளனர். 

இதனால் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது பயிர்கள் அழிவடைவதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கிருமிநாசினிகளின் விலை திடீரென அதிகரித்ததால் தாம் மிகுந்த கஷ்டப்படுவதாக அம்மாவட்டங்களின் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

விவசாயச் செய்கைக்குப் பயன்படுத்தும் யூரியா வகை உரம், களைகளுக்குப் பயன்படுத்தும் களைநாசினி மற்றும் கிருமிநாசினிகள் ஒருசில வாரங்களாக ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்டதை விட இரட்டிப்பான தொகையில் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, களையற்றுவதற்கு பயன்படுத்தப்படும் 'ரெட்ரீஸ்' எனப்படும் களைநாசினி கடந்த வாரம் 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், தற்போது 4,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

யூரியா உரம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதுடன், தற்போது 2,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறு திடீரென உரம், களைநாசினி மற்றும் கிருமி நாசினிகளினது விலை அதிகரிக்கப்பட்டமையால், கடன்பட்டு விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகள், பெரும் நட்டத்தை எதிர்நோக்குவதுடன், எதிர்காலத்தில் விவசாயச் செய்கையைக் கைவிடவேண்டிய நிலைமை ஏற்படக் கூடுமென கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு உரம், கிருமிநாசினி மற்றும் களைநாசினிகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.