ஆளும் கூட்டணி முரண்பாடு மஹிந்த தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்து வௌியேறும் நிலைக்கு வந்துள்ளது!
Friday, 07 May 2021

ஆளும் கூட்டணி முரண்பாடு மஹிந்த தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்து வௌியேறும் நிலைக்கு வந்துள்ளது!

19 April 2021 08:51 pm

ஆளும் அரசாங்க கட்சிகளுக்குள் காணப்படும் முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அரசியல் களத்தில் காண முடிகிறது.  அதன் ஒரு அங்கமாக இன்று இடம்பெற்ற ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டலாம். 

ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்று இன்று அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்கவென வந்த சிலர் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வௌியேறியுள்ளனர். 

ஆளும் கட்சியின் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோரே இவ்வாறு வௌிநடப்புச் செய்துள்ளனர். 

கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய போதும் இவர்கள் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வௌியேறியுள்ளனர். 

கட்சித் தலைவர்கள் அல்லாதவர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் வௌிநடப்பு செய்ததுடன் கட்சித் தலைவர்கள் மாத்திரம் கலந்து கொள்ளும் கூட்டத்தில் பங்கேற்பதாக கூறியுள்ளனர். 

குறிப்பாக இன்றைய கூட்டத்தில் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்தார். அவருடன் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டனர். 

அண்மைக் காலமாக ஆளும் கட்சிக்குள் முரண்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக அரசாங்கத்துடன் இணைந்துள்ள 11 சிறு கட்சிகள் தனியாக கூட்டங்களை நடத்தும் நிலைக்கு இந்த முரண்பாடு விரிவடைந்துள்ளது. 

இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கு பாரிய வீழ்ச்சியை இது ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.  

BR