சர்வதேச மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில்...
Tuesday, 20 Apr 2021

சர்வதேச மகளிர் தின ஆசீர்வாத பூஜை பிரதமரின் தலைமையில்...

7 March 2021 11:44 pm

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை களனி ரஜ மஹா விகாரையில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் இன்று (2021.03.07) பிற்பகல் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மகளிர் அமைப்பினால் இந்த ஆசீர்வாத பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் போதி மரத்தடியில் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமரினால் களனி தாதுகோபுரத்திற்கு ஒளியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆசீர்வாத பூஜை இடம்பெற்றது.

களனி ரஜ மஹா விகாராதிபதி பேராசிரியர் கொள்ளுபிடியே மஹிந்த சங்கரக்கித தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினர் ஆசீர்வாத பூஜையை நடத்தினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் நான்கு ஆண்டு நிறைவு, கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடையவும், இந்த தொற்று இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து இலங்கையர்களும் அதிலிருந்து பாதுகாப்பு பெறவும் வேண்டி இந்த ஆசீர்வாத பூஜை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆசீர்வாத பூஜையில் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் தலைவரும் அமைச்சருமான பவித்ரா தேவி வன்னிஆராச்சி, இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் நளின் பெர்னாண்டோ, சப்ரகமுவ மாகாண சபையின் தலைவர் கஞ்சன ஜயரத்ன, பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

KK