மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு - இலங்கையின் அறிக்கை
Friday, 14 Aug 2020

மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு - இலங்கையின் அறிக்கை

3 July 2020 01:56 pm

நிகழ்ச்சி நிரல் 2: உயர் ஸ்தானிகரின் வருடாந்த அறிக்கை தொடர்பான ஊடாடும் உரையாடல்

02 ஜூலை 2020

இலங்கையின் அறிக்கை

தலைவர் அவர்களே,

மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் வருடாந்த அறிக்கையை இலங்கை வரவேற்கின்றது. வேண்டுகோளின் பேரில் அரசுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக அலுவலகம் முன்னெடுத்துள்ள முயற்சிகளை நாங்கள் பாராட்டும் அதே வேளையில், அலுவலகத்தில் சமமான புவியியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றோம். ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கான எமது உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, 2020 ஆம் ஆண்டில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தன்னார்வபூர்மான 5000 அமெரிக்க டொலர் பங்களிப்பை இலங்கை வழங்கும்.

உலகில் கோவிட்-19 தொடர்பான மனித உரிமைகளின் தாக்கங்கள் குறித்து செவ்வாயன்று மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இந்த சபைக்கு வழங்கிய வாய்வழி ரீதியான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள்கள் குறித்தும் இலங்கை சுட்டிக்காட்ட விரும்புகின்றது. குறிப்பாக எதிர்கால கோவிட்-19 தடுப்பூசியை 'உலகளாவிய பொது நன்மை' என அங்கீகரிப்பதற்கான அவரது அழைப்பு, மற்றும் தொற்று தொடர்பான நிவாரணங்களுக்குத் தடையாக இருக்கும் பொருளாதாரத் தடைகளை தளர்த்துவது அல்லது இடைநிறுத்துவதற்கான அழைப்பு போன்ற தொற்றுநோயிலிருந்து மீள்வதற்கான அதிகமான சர்வதேச ஒற்றுமைக்கான உயர் ஸ்தானிகரின் வேண்டுகோளை நாங்கள் வரவேற்கின்றோம்.

1953 ஆம் ஆண்டு முதல் அனைத்து மக்களுக்குமான இலவசமான உலகளாவிய சுகாதாரத்திற்கு உத்தரவாதமளித்த ஒரு நாடு என்ற வகையில், தனது பிராந்தியத்தில் மிகவும் உயர்வான தனிநபர் சுகாதார செலவினங்களில் ஒன்றின் மூலமாக, சீரான, பல்துறை அணுகுமுறையினூடாக கோவிட்-19 தொற்று நோயின் பரவலை இலங்கையினால் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடிந்தது.

தேசிய மட்டத்திலான விரைவான தடுப்பு நடவடிக்கைகள், நன்கு வலையமைக்கப்பட்ட, பல்தரப்பட்ட பங்குதாரர்களின் தொடர்புத் தடமறிதல் பொறிமுறை மற்றும் திரைப்பிரதியெடுத்தல் / பரிசோதனை மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தல் ஆகியவற்றை நோக்கிய வலுவானதொரு சுகாதார அமைப்பு ஆகியன நாட்டில் கோவிட்-19 தொற்றின் சமூகப் பரவலை 2020 மே 01 முதல் பூஜ்ஜிய எண்ணிக்கையில் உறுதிப்படுத்துவதற்கு உதவியுள்ளன. கடைசியாக 2020 ஜூன் 01 ஆந் திகதி இடம்பெற்ற மரணத்துடன் 11 பேர் மாத்திரமே மரணமடைந்துள்ளதுடன், இலங்கையில் இடம்பெற்ற கோவிட்-19 நோயாளிகளின் இறப்பு விகிதம் 0.54% மட்டுமேயாவதுடன், இது உலகளாவிய மரண விகிதமான 4.85% ஐ விடவும் கணிசமாள அளவு குறைவாகும் அதே வேளையில், இலங்கையில் குணமடைந்தோரின் விகிதமான 83.59% ஆனது, உலகளாவிய குணமடைந்தோர் விகிதமான 54.77% ஐ விட மிகவும் அதிகமாகும்.

தலைவர் அவர்களே,

உலக சுகாதார தாபனத்தினால் பாராட்டப்பட்ட வகையிலான தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையானது, தனது மக்களுக்கு மாத்திரமன்றி அதன் ஆட்புலத்திலுள்ள வெளிநாட்டினரினதும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதற்காக முக்கியத்துவமளிக்கும் அனைத்தையும்  உள்ளடக்கியதும், பாகுபாடற்றதும் மற்றும் முழுமையானதுமாகும்.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் எச் சந்தர்ப்பத்திலும் அடிப்படைச் சுதந்திரங்களைப் பயன்படுத்துவதில் தடங்கல்களைத் தோற்றுவித்தமைக்கான அவசரகால நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிவகுக்கவில்லை, மாறாக இந்த தொற்றுநோயின் போது சமூகத்தின் அனைத்துப் பிரிவினரினதும் உரிமைகளை நாடு முழுவதும் பாதுகாக்கும் நோக்கத்துடன், சட்டத்தின் சரியான செயன்முறைக்கு இணங்க, பொது சுகாதாரத்தின் நலனுக்கான குறைந்தபட்சமான தற்காலிகக் கட்டுப்பாடுகளுக்கு கண்டிப்பாக மட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவை 2020 ஜூன் 28 ஆந் திகதி முழுமையாக நீக்கப்பட்டன.

இந்த பொது சுகாதார நடவடிக்கைகள், தொற்றுநோய்க்கு ஆட்படாமல் இருக்கச் செய்யும் முகமாக, சமூகத்தில் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளான குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நாள் வருமானம் ஈட்டுபவர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்துறைகள் ஆகியவற்றின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான கொள்கைகளுக்கு அமைவாக ஏற்படுத்தப்பட்டன. 

இது தொடர்பில், கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் முன்னோடியில்லாத வகையிலான பொருளாதார மற்றும் கடன் தொடர்பான சவால்கள் மற்றும் அதன் விளைவாக வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான கடன் நிவாரணம் மற்றும் நிதி சார்ந்த ஊக்கமளிப்பு ஆகியவற்றின் தேவை குறித்து உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்த அணிசேரா இயக்கத்தின் உச்சிமாநாட்டில் 2020 மே 4 ஆந் திகதி இலங்கை ஜனாதிபதி ஆற்றிய உரையை நினைவு கூர்கின்றோம். தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் அபிவிருத்தி செய்வதற்கான உரிமையை நிறைவேற்றுவதற்காக கடன் நிவாரணம் மற்றும் நேரடி முதலீடுகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம், உயர் ஸ்தானிகர் தனது புதுப்பிக்கப்பட்ட தகவல்களில் இந்தத் தேவையை எடுத்துரைத்துள்ளார் என்பதை நாங்கள் பாராட்டுகின்றோம்.

பிராந்திய மட்டத்தில், தொற்றுநோய் தொடர்பான சவால்களுக்கு உதவுவதற்காக பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் கோவிட்-19 அவசர நிதிக்கு இலங்கை 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

தலைவர் அவர்களே,

கோவிட்-19 தொற்றுநோய் உலகில் ஒரு புவியியல் பகுதியிலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும்போது, நமது உலகளாவிய நிலப்பரப்பில் நிலவுகின்ற, பெரும்பாலும் தொற்றுநோயின் விளைவுகளால் அதிகரிக்கும் தனிநிலையான ஏற்றத்தாழ்வுகளை நாம் அதிகளவில் நினைவுபடுத்துகின்றோம். இந்த சபை உட்பட ஐக்கிய நாடுகள் தாபனம் இந்த ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதிலும், கோவிட்-19 நெருக்கடியை சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் உண்மையில் எவரும் பின்வாங்காமலிருப்பதை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த நோக்கத்தை அடைய சர்வதேச சமூகங்களிடையே உண்மையான உரையாடலும் ஒத்துழைப்பும் முக்கியம் என இலங்கை நம்பும் அதே வேளையில், இந்த முடிவை நோக்கி தனது அனுபவங்களையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதற்காக சக நாடுகளுடன் ஒற்றுமையுடன் செயற்படவும் நாம் தயாராக இருக்கின்றோம்.

தலைவர் அவர்களே,

இலங்கை தொடர்பான 30/1 தீர்மானம் (இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்கு மசிடோனியா மற்றும் மொண்டினீக்ரோ) குறித்த மையக் குழுவினால் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் குறித்து குறிப்பிடுகையில், 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து விலகியுள்ள போதிலும், அரசாங்கத்தின் கொள்கைக் கட்டமைப்பிற்கு ஏற்ப, இலங்கை அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் செயற்படுத்தப்பட்ட செயன்முறையின் மூலம் அடைந்து கொள்வதற்கு உறுதிபூண்டுள்ளது என்பதை இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக உண்மையான நல்லிணக்கத்தை வழங்கத் தவறிய வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கட்டமைப்பைத் தொடர விரும்புவதற்கு பதிலாக, மக்கள் ஆணையால் ஆதரிக்கப்படுவதும், இலங்கை மற்றும் அதன் மக்களின் நலனுக்கானதுமான நாட்டிலுள்ள யதார்த்தங்களை அங்கீகரிக்குமாறும், நல்லிணக்கத்தை வழங்கக்கூடிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் இந்த அணுகுமுறையைப் பாராட்டுமாறும் அனைத்து தரப்பினரையும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றோம்.

இறுதியாக, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறையுடன் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடுவதோடு, உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் கொள்கைகளுக்கு அமைய, பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகுதிகளில் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப உதவிகளினூடாக சர்வதேச சமூகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயற்படுகின்றது.

நன்றி.

KK