3வது முறையாகவும் டெல்லியின் முதலமைச்சராக கெஜ்ரிவால் பதவியேற்பு
Monday, 06 Apr 2020

3வது முறையாகவும் டெல்லியின் முதலமைச்சராக கெஜ்ரிவால் பதவியேற்பு

16 February 2020 09:40 pm

இந்தியாவின்  தலைநகர் டெல்லியின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (16) பதவியேற்றுள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது.

காலை 10 மணியளவில் நடைபெற்ற விழாவில் கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றார்.

அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 6 மந்திரிகள் பதவியேற்றனர்.

இந்த விழாவில் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர்கள் முதல் டாக்டர்கள் வரை என்று டெல்லியின் கட்டமைப்புக்கு உதவி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த தனிநபர்கள் 50 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.