சஜின் வாஸ் குறித்து சட்ட மா அதிபர் ஏன் மௌனம் காக்கின்றார்
Monday, 27 Jan 2020

சஜின் வாஸ் குறித்து சட்ட மா அதிபர் ஏன் மௌனம் காக்கின்றார்

18 July 2019 03:32 pm

சஜின் வாஸ் குணவர்தன மற்றும் துறைமுக அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பியான் பந்துவிக்ரம போன்றவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் ஏன் மௌனம் காத்து வருகின்றார் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த இருவரும் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மஹிந்த ராஜபக்சக்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய பல்வேறு நபர்களுக்கு எதிராக சுமத்தப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு தேர்தலின் பின்னர் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன, எனினும் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குற்ற விசாரணைப் பிரிவினர், நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஆகியனவற்றினால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆவணங்களுக்கு என்ன நேர்ந்துள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஒரு தரப்பினருக்கு எதிராக துரித கதியில் சட்டத்தை அமுல்படுத்த முயற்சிக்கும் சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றுமொரு தரப்பினர் தொடர்பிலான விசாரணைகளில் அசமந்தப் போக்கினைப் பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் தற்போதைய சட்ட மா அதிபர் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகவே தென்படுகின்றது.