திவயின ஊடகத்தின் மற்றுமொரு போலிச் செய்தி

திவயின ஊடகத்தின் மற்றுமொரு போலிச் செய்தி

25 June 2019 10:51 am

திவயின ஊடகம் பல்வேறு போலிச் செய்திகளை வெளியிட்டு மக்களை திசை திருப்புவதனை பிரதான இலக்காக் கொண்டு செயற்பட்டு வருகின்றது எனக் கூறின் அது பிழையாகாது.

அந்த வகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை மற்றும் மஹரகம புற்று நோயாளர் வைத்தியசாலை ஆகியனவற்றுக்கு அருகாமையில் பூரண இலவசமாக உணவு வழங்கும் நிலையங்கள் இயங்கி வந்தன.

நோயாளர்களை பார்வையிட வருவோரின் நலன் கருதி இவ்வாறு நீண்ட காலமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

எக்ஸ்போ லங்கா என்னும் நிறுவனத்தினால் இவ்வாறு நான்கு ஆண்டுகளாக உணவு வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்போ லங்கா நிறுவனம் இலங்கையின் முதனிலை முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகும் என்பதுடன் இந்த நிறுவனம் மீது தற்பொழுது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் இலவசமாக உணவு வழங்கும் முஸ்லிம் அமைப்புக்கள் பற்றி கண்டறியுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே அரசாங்கத்திடம் கோரியிருந்தார் என திவயின கடந்த 22ம் திகதி செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த உணவுகளில் கருத்தடை மருந்துகள் கலக்கப்படுவதாக தெரிவித்தே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இந்த செய்தி குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த காரணத்தினால், குறித்த உணவு விநியோக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும், கருத்தடை விவகாரம் பற்றி தாம் எதுவும் கூறவில்லை என காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

திவயின பத்திரிகை இனக்குரோத அடிப்படையில் முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான செய்திகளை தொடர்ச்சியாக பிரசூரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.