மங்களவின் விருப்பத்திற்கு செயற்பட முடியாது : மங்களவுடன் முரண்படும் ராஜித்த
Sunday, 07 Jun 2020

மங்களவின் விருப்பத்திற்கு செயற்பட முடியாது : மங்களவுடன் முரண்படும் ராஜித்த

17 June 2019 03:35 pm

நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறுவதைப் போல சீனாவில் இருந்து சிக்கட்டுகள் கொண்டுவரப்பட்டால் தான் அரசாங்கத்தில் இரந்து விலகுவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து யாருடைய தேவைக்கு சிகரட் கொண்டுவர முயற்சிக்கிறார் என்பது தனக்குத் தெரியவில்லை எனவும், அவ்வாறு கொண்டுவரப்பட்டால், அவ்வாறானதொரு அரசாங்கத்தில் இருக்கத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கையில் ஏராளமான சீனத் தொழிலாளர்கள் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் புகைத்தல் பழக்கத்தைக் கொண்டவர்கள் எனவும் எனினும், இலங்கையில் உள்ள சிகரட்டுக்களில் காரத் தன்மை குறைவாக இருப்பதால் சீன சிக்கரட்டுகளையே அவர்கள் விருப்புவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் சட்டவிரோதமாகவும், களவாகவும் சீனாவில் இருந்து சிக்கட்டுக்கள் கொண்டுவரப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சிக்கரட் கொண்டுவர அனுமதி கோரப்பட்டுள்ளதால், இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் பலவந்தமாக சிகரட்கொண்டுவர முற்படவில்லை எனவும், ஏதேனும் ஒரு நிறுவனம் சிகரட் கொண்டுவர அனுமதி கோரினால் அதுகுறித்து பரிசீலிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனால், களவாகவும், சட்டவிரோதமாகவும் இலங்கைக்கு சிகரட் கொண்டுவரப்படுவது தடுக்கப்பட்டு, அதன்மூலம் இலங்கைக்கு வரி வருமானம் கிடைக்கும் எனவும் மங்கள சமரவீர அண்மையில் குறிப்பிட்டிருந்தார். எவ்வாறாயினும். வலுக்கட்டாயமாக அரசாங்கம் சிகரட் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடவில்லை எனவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.