ஊடகவியலாளர் குசல் பெரேரா கைதுசெய்யப்படமாட்டார்
Sunday, 07 Jun 2020

ஊடகவியலாளர் குசல் பெரேரா கைதுசெய்யப்படமாட்டார்

17 June 2019 03:27 pm

வெளிநாடு சென்று நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (16) ஊடகவியலாளர் குசல் பெரேராவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.

பொலிசார் கைதுசெய்யமாட்டார்கள் என இதன்போது குசல் பெரேராவிற்கு ஜனாதிபதி உறுதிவழங்கியுள்ளதாக தெரியவருகிறது. 

குசல் பெரோ மீதான முறைப்பாடு சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐய்வன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை குசல் பெரேரா தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

டெய்லி மிரர் நாளிதழில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடப்பு அரசியல் விமர்சின கட்டுரைகளை பல வருடங்களாக எழுதிவரும் மூத்த ஊடகவியலாளரான குசல் பெரேரா அவர்களுக்கெதிராக கொழும்பு உச்ச நீதிமன்றத்திற்கு குற்றப்புலனாய்வு பிரிவினால் குற்றப்பத்திரிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14.06.2019) டெய்லி மிரர் பத்திரிகை நிருபரிடம் பொலிஸார் விசாரணை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் தகவல்களுக்கிணங்க குசல் பெரேரா அவர்களால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு பின்னரான நிலைப்பாடுகள் குறித்து மே மாதம் 17 திகதி வெளியிடப்பட்டச் செய்தியினை அடிப்படையாகக் கொண்டு அவர் மதவாதத்தை தூண்டுகிறார் என குற்றஞ்சாட்டப்பட்டு ICCPR Act No. 57 of 2007 சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியபாடுகள் காணப்படுகின்றன.

இது மிகவும் பாரதூரமானதாகும். குசல் பெரேரா அவர்கள் தனது வாழ்நாளில் பிரிவினைவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் எதிராக தனது கருத்துகளை பயமின்றி முன்வைத்தவராவார். உலகளவிலும் இவ்வாறே அவர் பிரசித்தம் பெற்றிருக்கிறார். பக்கச்சார்பற்ற அரசியல் விமர்சகர் என்பதை அனைவரும் அறிவர்.

ஆங்கிலம் மற்றும் சிங்கள பிரதான பத்திரிகைகளில் எழுதிவரும் ஒரே ஒரு ஊடகவியலாளர் இவர் ஆவார். மேலும், அவர் “லக்பிம” பத்திரிகையின் ஆஸ்தான அரசியல் விமர்சகர் ஆவார். “லங்காதீப” பத்திரிகையிலும் தனது பங்களிப்பை செய்துவருகிறார். சர்வதேச ஊடகங்கள் கூட இவரின் கருத்துக்கு முக்கியத்துவத்தை வழங்குகின்றன.

அண்மையில் நாடாளுமன்றத்தில் இவரின் கருத்துகள் குறித்து ஜனாதிபதி பாராட்டி பேசியதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், பொலிசார் கைதுசெய்யமாட்டார்கள் என ஜனாதிபதி நேரடியாக தொலைபேசி அழைப்பின்மூலம் அறிவித்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.