ரணில் - மைத்திரி உறவை பிணைமுறியால் பிரிக்கமுடியாது
Thursday, 23 Jan 2020

ரணில் - மைத்திரி உறவை பிணைமுறியால் பிரிக்கமுடியாது

22 January 2018 02:39 am

""புதிய அரசியலமைப்பு விடயத்துக்கான தீர்வு சம்பந்தன் காலத்திலேயே வழங்கப்படாமல் இருக்குமானால், கடந்த காலத்தைவிட, வடக்கு, கிழக்கில் தீவிரமான ஒரு தலைமை ஏற்படுத்தப்படுவதை எவராலும் தடுக்கவேமுடியாது'' என்று தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்த விடயம் உள்ளிட்ட சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் "சுடர் ஒளி'க்கு அவர் வழங்கிய விசேட நேர்காணல் வருமாறு:

கேள்வி: நல்லாட்சி அரசின் தற்போதைய நிலைவரம் எவ்வாறு உள்ளது?

பதில்: பல்வேறு சவால்களைச் சந்தித்து, தடைகளை தகர்த்துக்கொண்டு முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. எம்மீதான விமர்சனங்கள்கூட ஊடக சுதந்திரம், பொலிஸ் சுயாதீனம், நீதி மன்ற சுயாதீனம் என எம்மால் கொண்டுவரப்பட்ட புதிய வெற்றிகளின் பக்கவிளைவாகவே இடம்பெறுகின்றன. சில குறைகள் இருந்தாலும், மஹிந்த அரசிலும் பார்க்க பாரிய முன்னேற்றம் எமது அரசில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

கேள்வி: உங்கள் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியானது கொழும்பில் தனித்துப் போட்டியிடுகிறது. இதன் வெற்றியானது தற்போது எவ்வாறு காணப்படுகிறது?

பதில்: நாடுமுழுவதுமுள்ள சுமார் 35 இடங்களில் நாம் போட்டியிடுகிறோம். அதில், 14 இடங்களில் ஒருமித்த முற்போக்குக் கூட்டணி என "ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறோம். கொழும்பு, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை போன்ற இடங்களில் எல்லாம் இவ்வாறுதான் போட்டியிடுகிறோம். ஏனைய 20 இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியாக "யானை' சின்னத்தின்கீழ் போட்டியிடுகிறோம். கொழும்பு மாநகர சபையைப் பொறுத்தவரை எமது வெற்றிவாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது. இங்கு தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழைத்தது. எனினும், எமது கட்சி நாடாளுமன்றத் தேர்தல் தவிர, உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தனித்தே கடந்த காலங்களில் போட்டியிட்டது. எமக்கென்று ஒரு கட்சி இருக்கிறது. இதில் வேட்பாளராக களமிறங்கியுள்ள இளைஞர்களுக்கு நாம் வாய்ப்பளிக்கவேண்டும் என்பதாலேயே தற்போதும் தனித்துப் போட்டியிடுகிறோம். இது ஒன்றும் புதிய வரலாறு அல்ல. அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரான ரவி கருணாநாயக்க மீது தற்போது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் தலைமையில் தேர்தலில் போட்டியிட நாம் தயாராக இல்லை. அவரது பட்டியலில் பாதாள உலகத்தினர், வெள்ளைவேன் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையோர், போதைப்பொருள் வர்த்தகர்கள் எனப் பலர் போட்டியிடுகின்றனர். இதுபோன்ற பலர் ஐக்கிய தேசியக் கட்சியின்கீழ் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இவர்களுடன் எமது படித்த இளைஞர்களை களமிறக்க நாம் தயாராக இல்லை. மேலும், கொழும்பில் சிங்களவர்களுக்குப் பிறகு தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழர்களின் வாக்குகள் தமக்குக் கிடைப்பதாகத் தெரிவித்துவரும் ஐக்கிய தேசியக் கட்சியானது இதுவரை ஒரு தமிழரைக் கூட மேயர் வேட்பாளராகக் களமிறக்கியதே இல்லை. தற்போதுகூட, ரோஸி சேனாநாயக்கவைத்தான் மேயர் வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது. இதற்கு முன்னரும் மொஹமட் முஸம்மில்தான் மேயராக இருந்தார். இதற்கு, தமிழர்கள் தமக்கு கண்களை மூடிக்கொண்டு வாக்களித்துவிடுவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி நினைப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இவ்வாறான காரணங்களும் நாம் தனித்துப் போட்டியிட முக்கியமான தாக்கத்தை செலுத்தியுள்ளன. அதேநேரம், புதிய முறையின்கீழ் தனித்துப் போட்டியிடுவதுதான் சிறந்தது என்பதாலும்தான் நாம் இவ்வாறு தனித்துப் போட்டியிடுகிறோம். உண்மையில் கொழும்புவாழ் தமிழர்கள் எமது சின்னத்துக்கு வாக்களித்தால், தமிழரான எமது மேயர் வேட்பாளர் சண்.குகவர்தன் வெற்றி பெறுவதும் நீண்டகால குறை நிவர்த்திசெய்யப்படும் என்பதும் உறுதியாகும்.

கேள்வி: ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்துவிட்டு ஏனைய இடங்களில் அக்கட்சியுடன் கூட்டணியமைத்து களமிறங்குவது முரண்பாட்டைத் தோற்றுவிக்காதா?

பதில்: முதிர்ச்சியுள்ள நிதானமுள்ள அரசியல்வாதியே தவிர, முகத்துடன் கோபித்துக்கொண்டு மூக்கை வெட்டிக்கொள்பவன் நான் அல்ல. எனினும், சிலர் கோபித்துக்கொள்வார்கள் என்பதற்காக சொல்லவேண்டியவற்றை கூறாமல் இருக்கவும் முடியாது. உண்மையில், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தேர்தல் செயற்பாடுகளைப் பொறுப்பேற்றுள்ள ரவி கருணாநாயக்க மீது எனக்கு உடன்பாடே கிடையாது. தற்போது முழு நாட்டுக்கும் அவர் யார் என்பது தெரிந்துவிட்டது. அரசின் தலைவரே அவர் யார் என்பதை சுட்டிக்காட்டிவிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி என்பது ரவி ஒருவரை மட்டும் சார்ந்ததல்ல. எனவே, இவ்வாறான கருத்துகள் எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

கேள்வி: மஹிந்த ராஜபக்ஷவும் தற்போது புதிய கூட்டணியுடன் களமிறங்கியுள்ளார். இதன் தாக்கம் யாருக்கு அதிகமாக இருக்கும்?

பதில்: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டுள்ளமையானது ஐக்கிய தேசியக் கட்சிக்கே சாதகமாகும். ஆனால், தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவின் பேரில் சுதந்திரக் கட்சி சமீபகாலமாக பாரிய முன்னேற்றத்தில் இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. பிணைமுறி அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு, எதிர்வரும் சில நாட்களில் நாடாளுமன்றிலும் விவாதத்துக்கு வரவுள்ளது. இதனுடன், கடந்தகால அரசின் பாரிய ஊழல் குற்றச்சாட்டுக் கள் தொடர்பிலான 34 அறிக்கைகளும் வெளிவந்துள்ளன. அதாவது, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மஹிந்த தரப்புக்கும் பாதகமான அறிக்கைகளே வெளிவந்துள்ளன. இது எதிர்காலத்தில் முழுமையாகப் பகிரப்படும்போது இத்தரப்பினருக்குப் பின்னடைவும் சுதந்திரக் கட்சிக்கு முன்னடைவுமே கிட்டும். எனினும், இத்தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைக்கும் என்பதும் உறுதியாகும்.

கேள்வி: இந்த அரசிலும் தமிழர்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளமை தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்: நாம் பாதிக்கிணற்றைத்தான் தாண்டியுள்ளோமே தவிர, முழுக்கிணற்றையும் தாண்டவில்லை என்பதை இங்கு சொல்லியே ஆகவேண்டும். காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட சில விடயங்களில் தாமதம் உள்ளதுதான். எனினும், தமிழர்கள் வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி, மலையகத்திலும் வாழ்ந்துவருகிறார்கள். மலையகத்தைப் பொறுத்தவரை பாரிய முன்னேற்றங்கள் எமது அரசில் ஏற்பட்டுள்ளன. 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு தனி வீடு கட்டும் திட்டம், நட்டத்தில் இயங்கும் தோட்ட நிறுவனங்களின் தொழில் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி, தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 2 ஏக்கர் காணியை உள்குத்தகைக்கு வழங்கி, அவர்களை சிறு முதலீட்டாளர்கள் என்ற அடிப்படையில் உள்வாங்கிய திட்டம் உள்ளிட்ட பலவற்றை எமது அரசு செய்துள்ளது. அரசியல் ரீதியாக மலையகத்தின் தாயகமான நுவரெலியாவில் புதிதாக நான்கு தமிழ் பெரும்பான்மைப் பிரதேச சபைகளையும் நாம் உருவாக்கியுள்ளோம். அரசுக்குள் இருந்துகொண்டு உட்கட்சி சமர்செய்த காரணத்தால்தான், 5 வருடங்கள் ஒத்திவைத்த பின்னரே தருவோம் என்று ஆரம்பத்தில் கூறிய இந்தப் புதிய பிரதேச சபைகள் இப்போது கொண்டுவரப்பட்டுள்ளன. இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய குறைகளையும் நிவர்த்திசெய்வோம்.

கேள்வி: அரசகரும மொழிகள் அமைச்சராக நீங்கள் கடமையேற்றுள்ளபோதிலும், தமிழ் மொழி புறக்கணிப்பு, எழுத்துப் பிழைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றனவே?

பதில்: நாம் இந்தக் குறைகளை நிவர்த்திசெய்ய பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டாலும், பலரது கண்களுக்கு குறைகள் மட்டுமே தெரிகின்றன. அத்தோடு, ஆட்சிமொழியான தமிழ் மொழியை அமுலாக்கும் பொறுப்பு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் என அனைவருக்கும் உள்ளது. நாமும் எமது அமைச்சின் ஊடாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகளை படிப்படியாக முன்னெடுப்போம். அந்தவகையில், அரச அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களில் ஒவ்வொரு பிரஜையும் தாய்மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள மற்றும் தெரிவிப்பதற்காக மொழி உதவியாளர்களை உள்வாங்கத் தீர்மானித்துள்ளோம். இவர்களுக்கு ஆறு மாதகால பயிற்சி வழங்குவதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயற்பாடு பெப்ரவரி 10ஆம் திகதிக்குப் பின்னர் இடம்பெறும் என்பதும் இவர்களுக்கு பயிற்சிக் காலத்தின்போதும் ஊதியம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி: மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் உங்களின் தனிப்பட்ட நிலைப்பாடு என்ன?

பதில்: இந்நாட்டில் எப்போதும் இல்லாதவகையில் ஊழலுக்கு எதிரான எழுச்சி தற்போது எழுந்துள்ளமையானது மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றே. குற்றவாளிகள் எவராக இருந்தாலும், சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மட்டுமன்றி, கடந்த கால ஊழல்கள் தொடர்பில் தற்போது வெளிவந்துள்ள அறிக்கைகளுக்கான நடவடிக்கைகளையும் துரிதகதியில் மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறு பெரும் கோடிகளைத் திருடிய பெரிய கேடிகள் எவராக இருந்தாலும், அவர்களின் உள்ளாடையைத் தவிர, ஏனைய அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு அவர்களை
சிறைக்குள் தள்ளவேண்டும். மேலும், திருடப்பட்ட பணம் மீண்டும் அரச கஜானாவுக்கு வரவேண்டும்.

கேள்வி: பிணைமுறி விவகாரம் தற்போது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுதொடர்பில் கடந்த காலங்களில் நீங்கள் ஏன் பெரிதாக கருத்தெதனையும் கூறாமல் இருந்தீர்கள்?

பதில்: மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது என்பது உண்மையாகும். இது எமது அரசால் மூடிமறைக்கப்பட்டிருந்தால் நாம் குரல் கொடுப்பதில் அர்த்தமுள்ளது. ஆனால், அதுதொடர்பில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு தினசரி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டமை மட்டுமன்றி, பிரதமர் கூட சாட்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார். மேலும், தற்போது விசாரணைகள் முடிவுற்று அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் குற்றவாளிகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார். இனிமேல் சட்டமா அதிபர் ஊடாக குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்படும். இந்த இயல்பான நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருந்திருந்தால் நாம் நிச்சயமாக குரல் கொடுத்திருப்போம்.

கேள்வி: ஜனாதிபதியின் இந்த அறிவிப்பானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதுகின்றீர்களா?

பதில்: இந்த இரு தலைவர்களதும் உறவானது, பிணைமுறி விவகாரத்துடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பதையும் ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட அறிக்கையிலுள்ள சிபாரிசுகளைத்தான் ஜனாதிபதி வெளிக்காட்டினாரே ஒழிய, இவை அவரின் தனிப்பட்ட கருத்தல்ல என்பதையும் அனைவரும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதேநேரம், பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதான குற்றவாளியான அர்ஜுன மகேந்திரன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று தன்மீது விழுந்துள்ள கறையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அகற்றுவார் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், இவர்களது உறவில் எந்தவொரு விரிசலும் ஏற்படாது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்.

கேள்வி: முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பலிஹேன ஆகியோர் குறித்து உங்களின் தனிப்பட்ட கருத்து என்ன?

பதில்: இவர்களுக்கு எதிராக தற்போது குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணை அவசியமெனில் அவர்களை அதற்கு அழைக்கவும், இந்த விசாரணைகள் போதுமெனில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே எமது கருத்தாகும். பார்ப்போம். நடப்பது நல்லதாகவே நடக்கும்.

கேள்வி: கூட்டரசின் ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. இந்நிலையில், இந்த அறிவிப்பானது ஒப்பந்தப் புதுப்பித்தலில் ஏதும் தாக்கத்தைச் செலுத்துமா?

பதில்: முதலில் இதுதொடர்பில் ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது, ரவியோ, அர்ஜுனவோ அல்லது குறித்த அதிகாரியோ எமது அரசின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாது. இவர்கள் எல்லாம் நல்லாட்சி அரசின் தூசிகளே. இவர்களை தட்டிவிட்டு நாம் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருப்போம். ரவி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தான் முடிவெடுக்கவேண்டும். இப்படியானவர் உபதலைவர் பதவியில் இருப்பது தமக்கு சாதகமானதா என்பதை அவர்களே தீர்மானிக்கவேண்டும். மாறாக, இதுபோன்றவர்களின் செயற்பாடுகள் அரசின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதெல்லாம் நகைப்பாக உள்ளது. இதுபோன்ற கொள்ளையர்கள் அரசை அசைக்க முடியுமென்றால், நாமெல்லாம் அரசை போராடி அமைத்ததிலும் அரசுக்குள் தற்போது இருப்பதிலும் அர்த்தமே இல்லையே. நிச்சயமாக 2020ஆம் ஆண்டுவரை நல்லாட்சி அரசை அசைக்கவே முடியாது. இந்த அரசு தொடர்ந்தும் நீடிப்பதில்தான் தமிழ் முஸ்லிம்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது.

கேள்வி: பிணைமுறி விவகாரத்தில் காட்டிய வேகம் கடந்த கால குற்றச்சாட்டுகள் தொடர்பில் இல்லாமல் இருக்கிறதே...

பதில்: ஆம். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக 3 விசேட நீதிமன்றங்களை நிறுவுவதற்கு அடுத்த வாரமளவில் நாடாளுமன்றுக்கு சட்டமூலமொன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டவலுகொண்ட
நீதிமன்றங்களில் தெரிவுசெய்யப்பட்ட நீதிபதிகள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இதனூடாக இந்தக் கடந்தகால விசாரணைகள் துரிதமாக்கப்படும் என்றே நாம் எதிர்பார்க்கிறோம்.

கேள்வி: சரி, புதிய அரசியலமைப்பு தொடர்பிலான செயற்பாடுகள் தொடர்ந்தும் தாமதமடைகிறதே. இதுதொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: இதனையிட்டு மிகவும் கவலையடைகிறேன். தேர்தல் செயற்பாடுகளுக்காக வெட்டப்பட்ட முதல் பலிக்கடாவாக இந்த அரசியலமைப்பு விடயமே காணப்படுகிறது. இதுதொடர்பில் விவாதிக்க அரசமைப்பு நிர்ணய சபையில் கடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்துக்குப் பின்னர் ஒரு நாளை ஒதுக்கியிருந்தோம். எனினும், அப்போது எவரும் வருகை தராத காரணத்தால் 10 நிமிடங்களிலேயே சபை கலைக்கப்பட்டது. பெரும்பான்மைப் பிரதிநிதிகளுக்கு இது விளையாட்டாக இருந்தாலும், எமக்கு இந்த விடயமானது மிகவும் வேதனையையே அளிக்கிறது. அரசியலமைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் காலத்திலேயே தீர்வைப் பெற்றுக்கொடுக்கவேண்டும். இதனை கைநழுவவிடுவது போன ரயிலுக்கு கை காட்டுவதாக அமைந்துவிடும். அத்தோடு, அரசு இதனை நிராகரிக்குமானால் கடந்த காலத்தையும்விட, வடக்கு, கிழக்கில் தீவிரமான ஒரு தலைமை ஏற்படும் என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும். பிணைமுறி விவகாரம் தொடர்பில் எல்லாம் சபையில் விவாதிக்க முடியுமாக இருந்தால் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஏன் விவாதிக்க முடியாது என்பதுதான் எனது கேள்வி.

கேள்வி: இறுதியாக வடக்கு, கிழக்கில் "ஏணி' சின்னத்தை எப்போது பார்க்கலாம்? (சிரிக்கிறார்)

பதில்: அங்கு தற்போது வீடு, வீணை, உதயசூரியன் என்பன இருக்கும்போது, இவற்றுக்குப் போட்டியாக ஏணியும் எதற்காக செல்லவேண்டும் என்று புரியவில்லை. வரலாறுதான் இத்தனை காலமாக என்னை உருவாக்கி வருகிறது.
எனவே, எதிர்காலத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்களிப்பு வடக்கு, கிழக்குக்குத் தேவை என்று வரலாறு தீர்மானிக்குமானால் அந்தச் சவாலையும் கையில் எடுக்க நாம் பின்வாங்கமாட்டோம்.

அ.அருண்பிரசாந்த்
- நன்றி சுடர்ஒளி