புதிய அரசியல-மைப்புக்கு சு.க.வுக்கும் தொடர்பே இல்லை
Thursday, 23 Jan 2020

புதிய அரசியல-மைப்புக்கு சு.க.வுக்கும் தொடர்பே இல்லை

7 January 2018 03:13 pm

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாங்கள் எந்த வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கவில்லை. அது ஐக்கிய தேசியக்கட்சி வழங்கிய வாக்குறுதி. தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளது. இருப்பினும் புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் சுதந்திரக் கட்சிக்கு தொடர்பில்லை என எஸ். பி திஸாநாயக்க "சுடர் ஒளி'க்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். 

மேலும், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுன அணி 5ஆம் நிலை சக்தியாகவே உள்ளது. ஐக்கிய தேசியக்கட்சிக்கும் பிணைமுறி என்ற கடிவாளம் உள்ளது. எனவே, எமக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் வெற்றி நிச்சயிக்கப்பட்டதொன்று எனவும் தெரிவித்தார்.

அவர் அளித்த செவ்வியின் முழு விபரம் வருமாறு,

கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் எவ்வாறான பெறுபேற்றை காட்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : சுதந்திரக் கட்சி பல சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளது. ஆனால், அவற்றினால் சுதந்திரக் கட்சியானது ஒருபோதும் நட்டமடைந்ததில்லை. அவ்வாறான நிலையிலேயே தற்போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் பலமாக உள்ளது. ஆனால், எமது கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கட்சியை விட்டுச்சென்று புதிய கட்சி அமைக்க தீர்மானித்துள்ளார். இருப்பினும், அவர் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளராக இருந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும், அப்போதைய சுதந்திரக் கட்சியின் செயலாளராகவிருந்த அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் அவரின் புதிய கட்சிக்கு செல்லவில்லை அவர்கள் இன்றும் மைத்திரி அணியிலேயே உள்ளனர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பொருளாளராக பதவி வகித்த நானும் தற்போது சுதந்திரக் கட்சியிலேயே உள்ளேன். அதேபோல் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் எம்முடன் உள்ளது. இவர்கள் சுதந்திர கட்சியின் பலமான பங்காளிக் கட்சியாவர். மறுபுறத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் மைத்திரி அணிக்கே கிட்டியுள்ளது. சுதந்திரக் கட்சி எந்த விதத்தில் பலம் குன்றவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.

கேள்வி : ஐக்கிய தேசியக் கட்சியின் இம்முறை சுதந்திரக் கட்சிக்கு பலமான சவாலாக அமையும் என எதிர்பார்க்கின்றீர்களா?

பதில் : ஐக்கிய தேசியக் கட்சி முன்பு பலமான கட்சியாக இருந்தது. இந்நிலையில் தேசிய அரசாங்கத்திலும் சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளது. இவ்வாறிருக்கின்ற போதும் தற்காலத்தில் சுதந்திரக் கட்சிக்கு முன்னாள் சவாலாக நிற்க எத்தனிக்கும் கட்சிகளில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான கட்சிக்கு ஆதரவில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது. அவ்வாறிருக்க முன்னாள் ஜனாதிபதி தலைமையில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட தயாராகும் பொதுஜன பெரமுன கட்சியும் தற்போது வீழ்ச்சி கண்டுகொண்டிருக்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியும் பலமிழக்க ஆரம்பித்துள்ளது. அதற்கு பிரதான காரணம் பிணைமுறி விவகாரமாகும். இதனால், ஐக்கிய தேசிய கட்சியின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை அற்று போய்விட்டது. எனவே, தற்போது ஐக்கிய தேசிய கட்சியும் எமக்கு மிகப்பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கவில்லை.

கேள்வி : இன்று 31 ஆம் திகதியுடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டமைக்கான ஒப்பந்தம் நிறைவுபெற்றுவிடும். அதன் பின்னர் சுதந்திரக் கட்சியின் தீர்மானம் எவ்வாறு அமையும்?
பதில் : தேசிய அரசாங்கத்தை நீடிப்பதா, இல்லையா என்ற விவகாரம் குறித்து அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைப்போம் என கூறியுள்ளார். ஆனாலும், இது குறித்த எந்த பேச்சுவார்த்தைகளையும் ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து முன்னெடுக்கவில்லை என்பதே உண்மையான நிலைவரமாகும்.

கேள்வி் : இரு கட்சி இணைந்தால் மாத்திரம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று கூறப்பட்டது, தேசிய அரசின் ஒப்பந்தம் முடிவுறும் காலம் வந்தும், தேசிய பிரச்சினைக்கான தீர்வும் புதிய அரசியலமைப்புக்கும் இந்த ஆட்சியிலும் கேள்விக்குறியாகத்தானே உள்ளதா...

பதில் : ஆம். ஆனால், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியாக உள்ளது. இருப்பினும், புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் சுதந்திரக் கட்சிக்குத் தொடர்பில்லை. அது தொடர்பிலான வாக்குறுதியை ஐக்கிய தேசியக் கட்சியே வழங்கியிருந்தது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரகடனத்தில் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லக்கூடிய வகையிலான எவ்விதமான புதிய அரசியலமைப்பு திருத்தங்களையும் கொண்டுவரப்போவதில்லை என உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை மேற்கொண்ட போது அதனில் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டிய அம்சங்கள் இருக்கவில்லை. ஆனால், ஐக்கிய தேசிய கட்சி புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம் என்ற வாக்குறுதியை பகிரங்கமாக கூறியிருந்ததையும் மறுக்க முடியாது. அதனால் புதிய அரசியலமைப்பொன்றினை கொண்டுவருவதற்கு மக்கள் ஆணை இல்லை என்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.

கேள்வி : தேசிய அரசாங்கம் நீடிக்காது என்பதையா நீங்கள் கூறுகின்றீர்கள்?

பதில் : அவ்வாறில்லை. அது குறித்த தீர்மானங்கள் இன்னும் எட்டப்படவில்லை. தேசிய அரசு தொடர்ந்தும் நீடிக்கப்படக் கூடும் அவ்வாறு தேசிய அரசாங்கம் தொடர்ந்து நீடித்தால் இனவாதக் கட்சிகள் உருவாகும் ஒரு சாத்தியமும் உள்ளது. எனவே அதனை தவிர்க்க தொடர்ச்சியாக தேசிய அரசாங்கத்தை நீடிக்காமல் இருப்பதே சிறந்ததாகும்.

கேள்வி : தற்போது தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டுள்ள சுதந்திரக் கட்சி அணியில் அதிகளவிளானோர் தேசிய பட்டியலில் தெரிவான உறுப்பினர்களாகவே உள்ளனர். இவ்வாறிருக்க சுதந்திரக் கட்சின் பண்டாரநாயக்க கொள்கையை மைத்திரி மஹிந்த அணிகளில் எந்த அணி பின்பற்றுகின்றதென நினைக்கின்றீர்கள்?

பதில் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டாம் என்றும், அதற்கு மாறாக அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சி சார்பில் களமிறக்குவோம் என்று கட்சி உறுப்பினர்கள் கோரிய போதும், அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செவிமடுக்கவில்லை.அதற்கு மாறாக, தனது சகோதரருக்கும் வழிவிடாமல் தானே தேர்தலில் குதித்தார். அன்று அவர் தேர்தலில் குதிக்காமல் கட்சி உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு மதிப்பளித்திருந்தால் இன்று அவர் தோல்வியுற்றிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. எனவே, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட சு.க. உறுப்பினர்களின் வெளியேற்றம் சுதந்திரக் கட்சியுடன் இணைந்திருந்த பழைய உறுப்பினர்களுக்கு தேசிய பட்டியல் வாயிலாக தெரிவாகும் வாய்ப்பினை பெற்றுக்கொடுத்துள்ளது.

கேள்வி : பதியதலாவ உள்ளிட்ட இரு பிரதேச சபைகள் சார்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதே அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

பதில் : இந்த விவகாரம் தொடர்பில் தற்போது சுதந்திர கட்சியின் மத்திய குழு அவதானம் செலுத்தி வருகின்றது. எனவே மத்திய குழுவினால் மேற்கொள்ளப்படும் தீர்மானத்தின் பிரகாரம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

கேள்வி : மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து நீக்கப்பட்ட இரு உறுப்பினர்களை சுதந்திர கட்சி இணைத்துக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றதே, அதன் உண்மைத்தன்மை பற்றி கூறுங்களேன்...

பதில் : மக்கள் விடுதலை முன்னணியில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இருந்த இருவர் சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டுள்ளனர். இவர்கள் கட்சியை விட்டு விலகிச் சென்ற காரணத்தினால் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க மேற்படி இருவரும் முன்பே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் கட்சியிலிருந்து ஒருவர் விலகிச் செல்கின்ற வேளையில் கட்சித் தலைவரின் மனநிலைமை குழப்பத்துடனேயே இருக்கும் அதே நிலையில்தான் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் உள்ளார்

கேள்வி : எவ்வாறாயினும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி இரண்டாம் நிலை சக்தியாக தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்படுகின்றதே...

பதில் : ஆம். முன்பு அந்த நிலைப்பாடு காணப்பட்டது உண்மைதான் இருப்பினும் தற்போது அவ்வாறில்லை. தற்போது முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அணி 5ஆம் நிலை சக்தியாகவே உள்ளது. குறிப்பாக, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பார்க்கின்ற போதிலும் அவர்களுக்கு பின்னால் உள்ள கட்சியாகவே தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி உள்ளது.

கேள்வி : தற்போதும் தாமரை மொட்டு சின்னத்திலான கட்சியுடன் 20 இற்கும் மேற்பட்ட பங்காளிக் கட்சிகள் கைகோத்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது சுதந்திர கட்சிக்கு சவாலாக அமையுமா?

பதில் : பொதுஜன பெரமுன கட்சியுடன் பல கட்சிகள் தேர்தல் காலத்தில் கைகோத்துக்கொண்டாலும் அந்த அணி பலமடைய முடியாது. அக்கட்சியுடன் இணைந்துகொண்டுள்ள சிறு கட்சிகளில் பல கட்சிகள் பெயர் பலகைக்கு மாத்திரமே மட்டுப்பட்டவையாகும். எனவே, அவற்றின் கூட்டு பொதுஜன பெரமுனவை பலமிழக்கச் செய்யும் என்பதே உண்மையான நிலைப்பாடாகும்.

கேள்வி : சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையின் நிமித்தம் இடம்பெற்ற பல பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தன. கட்சியின் இணைவுக்கு தடையாக உள்ளவர்கள் யார் என்பதை பகிரங்கமாக கூற முடியுமா?

பதில் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் சுதந்திர கட்சியை பிளவுபடுத்தவில்லை என்று கூறினாலும், அவர்தான் கட்சியை பிளவுபடுத்துகின்றார் என்பதே உண்மையாகும். அவ்வாறு இல்லாவிடின் அவர் புதிய ஒரு கட்சிக்கு தலைமைதாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதல்லவா? எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ஷவுமே கட்சியின் இணைவுக்கு தடையாக உள்ளதோடு, தமது குடும்ப உறுப்பினர்களின் அரசியல் லாபம் குறித்து மாத்திரமே சிந்திக்கின்றார்கள் என்றார்.

கேள்வி : தற்போதைய அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவ்வாறான நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திரக் கட்சி எவ்வாறான நியாயப்பாடுகளை மக்கள் முன்னிலையில் வைக்கப்போகின்றது?

பதில் : அவ்வாறில்லை. அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்காமல் இருக்கவில்லை. அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளில் இனிவரும் காலங்களில் எதிர்பார்க்க முடியும். இவ்வாறான நிலையில் மக்கள் முன்னிலையில் செல்லும்போது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துகொண்டுள்ள தரப்புக்களுக்கு வாக்களிக்கின்ற பட்சத்தில் மாத்திரமே தமக்கு தமது பிரதேசங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்துகொள்ள முடியும் என்ற நியாயப்பாட்டினை முன்னிலைப்படுத்துவதே சுதந்திரக் கட்சியின் எதிர்பார்ப்பாக உள்ளது.

க.கமல்
- நன்றி சுடர்ஒளி