கேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு
Monday, 01 Jun 2020

கேள்விக் குறியாகியுள்ள யாழ். குடாநாட்டு மக்களின் பாதுகாப்பு

6 August 2018 03:13 am

யாழ்ப்பாணக் குடாநாட்டு நிலைமைகளைப் பார்த்தால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போலாகி விட்டது. எதற்கெடுத்தாலும் வாள், கத்தி, கோடரி என்று ஆயுதங்களைத் தூக்கிக் கொள்வது வழக்கமாகி விட்டது.

குடும்பச் சண்டைகளிலும், தெருச் சண்டைகளிலும், திட்டமிட்ட குற்றங்களிலும் வாள் வெட்டு என்பது சாதாரணமான ஒன்றாக மாறி வருகிறது.

எங்காவது வாள் வெட்டு இடம்பெற்றால் உடனே அது ஆவா குழு, வாள் வெட்டுக் குழு என்று கதையும் பரவி விடுகிறது.

1980களின் தொடக்கத்தில் இருந்து நடுப்பகுதி வரையான காலகட்டத்தில் வடக்கில் அதிகளவு ஆயுதப் போராட்ட அமைப்புகள் செயற்பட்டன. எல்லாமே தமிழீழத்தை அமைக்கப் போவதாகச் சொல்லி இயங்கியவை தான்.

எங்காவது சில பெயர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கும். அதை வைத்துத்தான் இப்படியொரு அமைப்பு இருக்கிறது என்று தெரிய வரும்.

உண்மையில் எத்தனை இயக்கங்கள் இருந்தன அவற்றின் தலைவர்கள் யார் எத்தனை பேர் அவற்றில் இருந்தனர். பின்னர் அவர்கள் எல்லோரும் என்னவானார்கள் என்றுகூடத் தெரியாது.

ஆனால் தாமும் விடுதலைப் போராளிகள் இயக்கம் என்று மக்கள் முன் நடமாடினார்கள். தாமும் ஆயுதங்களை வைத்திருக்கிறோம் என்று மக்கள் முன் காட்டுவதற்காக இடுப்பில் பனங்கொட்டையை(ஊமல்) வைத்துக்கொண்டும் நாடகமாடினார்கள்.

அந்தக் காலகட்டத்தில் யாருடைய இடுப்பிலாவது சேர்ட் கொஞ்சம் வீங்கியபடி இருந்தால் அவரை இயக்கமாப் பார்க்கின்ற ஒரு போக்கு இருந்தது. இடுப்பில் கிரனேட் இருக்கலாம் என்ற கணிப்பே அது. அவ்வாறானவர்கள் எல்லோரும் இயக்கமாகவே தென்பட்டார்கள்.

அதுபோலவே இப்போது எங்கு வாள் வெட்டு நடந்தாலும் ஆவா குழு, அந்தக் குழு, இந்தக் குழு என்று அடையாளப்படுத்துவது ஒரு வேலையாகி விட்டது.

இந்தப் பெயர் சூட்டலுக்குப் பின்னால் ஊடகங்கள் தான் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளும் கூட சில காலத்திற்கு முன்னர் இருந்ததை மறந்து விட முடியாது.

அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார ஊடகங்களில் செய்திகள் வெளியாவது போன்று யாழ்ப்பாணத்தில் நிலைமைகள் ஒன்றும் மோசமாக இல்லை என்று கூறியிருந்தார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ்மா அதிபருடன் வடக்கில் அதிகரித்திருந்த வன்முறைகள் குறித்து நேரில் ஆராய்ந்த பின்னரே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

ஊடகங்கள் கூறுவது போன்று வடக்கில் மோசமான நிலை இல்லை என்ற அவரது கருத்து அபத்தமானது. ஏனென்றால் ஊடகங்கள் நடக்காததொன்றை செய்தியாக்கவில்லை.

நடந்த சம்பவங்களை செய்தியாக்குகின்ற போது ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்கள் இடம்பெறும் போது அல்லது அடுத்தடுத்து இத்தகைய சம்பவங்கள் தொடரும் போது அதனைப் பாரதூரமாகவே மக்கள் பார்ப்பார்கள் என்பது வெளிப்படை.

ஓரிரு சம்பவங்களை வைத்துக் கொண்டு ஊடகங்களினால் ஒன்றையும் ஊதிப் பெருப்பித்து விட முடியாது.

அதேவேளை தொடர்ச்சியான சம்பவங்கள் நடக்கும் போது அதனை ஒரு சமூகப் பிரச்சினையாக வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கு ஏற்படுகிறது.

அதனைச் செய்யும் போது தான் இது ஊடகங்களின் வம்பு வேலையாக அரசாங்கத்துக்கு தென்படுகிறது.

குடாநாட்டில் அண்மைக்காலங்களாக வன்முறைகளும், சமூக விரோதச் சம்பவங்களும் அதிகரித்த போது அதனைக் கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவுமில்லை, தடுக்கவுமில்லை.

ஆனால் புலிகளின் காலத்தில் இப்படியெல்லாம் நடக்கவில்லையே என்று அங்கலாய்த்த போது அதுவும் அரசாங்கத்துக்கு பிடிக்கவில்லை.

ஒவ்வொருதரும் ஒவ்வொன்றைச் சொல்லி புதுவிளக்கம் கொடுத்தார்கள். ஊடகங்கள் இதனைப் பெரிய விடயமாக காண்பித்த போது அதையும் அரசாங்கத்தினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் அடுத்தடுத்து நடந்த பல சம்பவங்கள் குடாநாட்டைப் பீதியில் உறைய வைத்திருந்தது.

அப்போது அதற்கெதிராக மிகப் பெரியளவில் ஊடகங்கள் குரல் கொடுத்தன. ஆனாலும் மிக ஆறுதலாக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்தைப் பார்க்க வந்தது அமைச்சர்கள் குழு.

பொடிநடையாக கொழும்பில் இருந்து வந்திருந்தாலும் கூட இன்னும் விரைவாக வந்து சேர்ந்திருக்கலாம்.

ஜூன் மாத பிற்பகுதியில் தீவிரமடைந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆராய ஜூலை மாத நடுப்பகுதியில் தான் கொழும்பிலிருந்து அமைச்சர்களும் பொலிஸ்மா அதிபரும் வந்தனர்.

அவர்கள் வந்து நின்ற போதே தென்மராட்சியில் வாள் வெட்டுச் சம்பவம் நிகழ்ந்தது. அதற்குப் பின்னரும் அத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

கடந்த வாரம் ஒரே நாளில் ஐந்து ஆறு சம்பவங்கள் நடக்குமளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. கிராமசேவகரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்தும் அளவுக்கு எல்லை மீறியிருக்கிறது.

ஆனாலும் அரசாங்கம் எதனையும் கண்டு கொள்வதாகவோ அலட்டிக் கொள்வதாகவோ தெரியவில்லை.

சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பொலிஸ் மா அதிபரும் யாழ்ப்பாணம் வந்து சமூக விரோதச் செயல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப் படையினரை அதிகளவில் ஈடுபடுத்துவதற்கு முடிவு செய்து விட்டுச் சென்ற பின்னரும் அத்தகைய செயல்கள் முடிவு கட்டப்படவில்லை.

இதனால் எங்கிருந்து இந்தப் பிரச்சினை முளைக்கிறது என்ற நியாயமான கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது. யாருடைய துணை இவர்களுக்கு இருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

வடக்கிற்கு கள ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, இராஜாங்க அமைச்சர் நளின் பண்டார, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரும்ப ஒரே விடயத்தைக் கூறியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்கள் ஒன்றும் அதிகரிக்கவில்லை வடக்கில் வாள்வெட்டுகளில் ஈடுபடுபவர்கள் ஒன்றும் தீவிரவாதக் குழுக்கள் அல்ல. அவர்கள் தென்னிந்திய திரைப்படங்களில் தாக்கத்தினால் வாள்களை கையில் ஏந்திய 17, 18 வயதுள்ள சிறுவர்கள் தான். இவர்கள் யாரையும் கொல்லவில்லை. சிறியளவில் காயத்தை ஏற்படுத்தும் தாக்குதல்களைத் தான் நடத்தியிருக்கிறார்கள். என்றெல்லாம் அரசாங்க அமைச்சர்கள் கூறியிருந்தனர்.

வடக்கில் வாள் வெட்டு போன்ற வன்முறையில் ஈடுபடுபவர்களை யாரும் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று கூற வரவில்லை. தெற்கில் வேண்டுமானால் அத்தகைய அபத்தமான கருத்து பரப்பப்பட்டிருக்கலாம்.

வாள் வெட்டுக்களில் ஈடுபடும் இளைஞர்கள் உணர்ச்சி வேகத்தில் செயற்படுபவர்ளாக மாத்திரம் இருக்கவில்லை.

சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் அவர்களைத் தடுப்பதில் அல்லது கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை காண்பித்திருந்தால் இன்று அரச அதிகாரிகளின் கழுத்தில் வாளை வைக்கும் நிலை வந்திருக்காது. வாள் வெட்டுக் குழுக்கள் என்று மக்கள் அஞ்சுகின்ற நிலை இன்று தோன்றியிருக்கிறது. வீதிகளில் நடமாடுவதற்கு மாத்திரமன்றி வீடுகளுக்குள் இருக்கவே பயப்படும் நிலை வந்திருக்கிறது.

இரவில் தான் இந்த நிலை என்று இல்லை.. இப்போது பட்டப்பகலில் கூட தைரியமாக வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்து தாக்கி விட்டுச் செல்லும் அளவுக்கு வடக்கின் பாதுகாப்பு இருக்கிறது.

சாதமாரண மக்களை நோக்கி நடத்தப்படும் வன்முறைகள் மக்களின் அதிகபட்ச பொறுமைக்கு சோதனையாக மாறி வருகிறது.

ஆனால் அரசாங்கமோ இது சிறுவர்களின் விளையாட்டு தென்னிந்திய திரைப்படங்களின் தாக்கம் என்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தென்னிந்திய திரைப்படங்களில் மாத்திரம் வன்முறைக் காட்சிகள் இல்லை. எல்லா மொழிப் படங்களிலும் அத்தகைய காட்சிகள் இருக்கின்றன. அது பலகாலமாகவே இத்தகைய படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

திடீரென இப்போது தான் இது யாழ்ப்பாண இளைஞர்கள் மத்தியில் ஊறிப்போய் இருப்பது போல அரசாங்கம் நியாயப்படுத்துகிறது.

சரி அப்படியே இருந்தாலும் வன்முறைக் குழுக்கள் உருவாகும் போது அதனைக் கட்டுப்படுத்தும் அவசியம் அரசாங்கத்துக்கு இல்லையா?

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போகிறதே என்று குரல் கொடுக்கும் ஊடகங்களின் வாயை அடைக்கத் தெரிந்த அரசாங்கம் அத்தகைய செயல்களைக் கட்டுப்படுத்தும் திராணியற்றிருக்கிறதே.

வாள் வெட்டுக் குழுக்களின் பீதியில் உறைந்திருக்கின்ற மக்களை இப்போது குள்ள மனிதர்களும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி ஒன்றுமில்லை என்று பொலிஸ் தரப்பு கூறினாலும் மக்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தை எப்போதும் பரபரப்பாக பயத்தில் உறைய வைத்திருக்க வேண்டும் என்பதில் அரசாங்கமும் கூட ஆசைப்படுகிறது போலத் தெரிகிறது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கிறிஸ் பூதங்கள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து பெண்களையும் சிறுவர்களையும் பயமுறுத்தினார்கள். துரத்திச் சென்றால் படைமுகாம்களுக்குள் ஓடி ஒழிந்தார்கள். கடைசியில் அது அரசாங்கத்துக்கே ஆபத்தாக வந்து முடிந்தது.

மீண்டும் அதேபோன்று இப்போது குள்ஹள மனிதர்கள் கிளம்பியிருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கைக் கவனிக்க வேண்டியவர்கள் அதனை உரியவாறு கவனித்தால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படாது. அரசாங்கத்தின் மெத்தனம் வடக்கை இன்னும் கொதிகளமாகவே மாற்றி வருகிறது.

ஒருவேளை இது வாள் வெட்டுக் குழுக்களுக்கு எதிராக புதிய குழுக்களைத் தோற்றுவிக்கும். அவர்களே தமக்குள் அடிபட்டுச் சாகட்டும் என்ற நோக்கமும் கூட அரசாங்கத்திடம் இருக்கிறதோ தெரியவில்லை.