நல்லாட்சி என்பது வெறும் வெத்து வேட்டு நாடகமே

நல்லாட்சி என்பது வெறும் வெத்து வேட்டு நாடகமே

25 March 2018 10:07 am

இலங்கையின் பொது நிர்வாக சொற்றொகுதியில், கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து பேசு பொருளாகிப்போன புதிய அவதாரமாக, ‘நல்லாட்சி’ எனும் தொனிப்பு, ஒழுங்கமைவின்றி இழையோடிப் போயுள்ளது.

இது அபிவிருத்தியினதும்,சமத்துவத்தினதும் இலக்கை அடைவதற்கு அவசியப்பாடுடைய அரசியல் மற்றும் நிறுவன ரீதியான நடைமுறைகள், அது சார்ந்து வெளிப்பாடுகளுடன் தொடர்புறுகிறது என்ற வெளிப்படுத்தல் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்திலே,தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்காலம் குறித்து சிந்தனைவயப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர். அன்றாட வாழ்வியலில் எதிர்வினைகளிடம் இருந்து தப்பிப் பிழைத்து தம்மை நிலை நிறுத்திக் கொள்ளப் பாடுபட வேண்டியவர்களாக அசைவுறுகின்றனர்.

குறிப்பாக உரிமை என்ற உயர் படிநிலையை தம்வயப்படுத்திக்கொள்ள முயற்சிக்கவும், அதிகார வர்க்கத்தோடு நியாயங்களைத் தர்க்கிக்கவும், முரண்டு பிடித்தால் உறை வாளாய் உண்மைகளை இடித்துரைத்து, தீர்வு பெற‘அறை’ கொடுக்கவும் தயங்கக்கூடாது.

உண்மையில் இவை சாத்தியமா என்ற கேள்வி நிலைகள் 2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்கு முன்பான பயணவெளியில் தமிழர்களிடத்தில் இருந்ததில்லை. அகிம்சை,ஆயுதம் என்ற தோற்றுவாய்கள் தந்த ஆத்மபலம் என்பது, விடுதலையையும் அதன்பால் முன் நகர்ந்த உரிமை வேட்கையையும் ஒழுங்குறக் கட்டமைத்து வழிநடத்தின.

ஆனால், பன்னாடுகளின் அனுசரணையோடு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மன்னிக்க முடியாத ‘தமி ழர் தாயக இனப்படுகொலை’ மீள முடியாத சோக இடுகுறியின் முற்றுகையாக, அத்தனை விடயங்களையும் கேள்விநிலைக்கு உட்படுத்தியுள்ளது.

கட்சி, கொள்கை, கொள்கைப் பரப்புரை, தேர்தல் விஞ்ஞாபனம், உறுப்புரிமை, உறுப்பினர் தெரிவு, அதிகாரப் பரம்பல், நிதிப்பரம்பல், மக்கள் பணத்தில் கொழுத்த சம்பளம், பொது நிகழ்வுகளில் வரவேற்புக் கம்பளம் எனக் காட்சி பெறும் இவர்கள் வாழ்வு செந்தளிக்கிறது.

வரையறுக்கப்பட்ட நியதிச் சட்டங்களின்பின், ஜனநாயக செயல்வெளியாக அங்கத்துவம் பெற்று நாடாளுமன்றம் செல்கின்ற போதும், அங்கு பேச்சுரிமை என்பது ஆக்கவுரிமையாக மாற்றம் பெறுவதில்லை.

ஓர் பொது நிகழ்வின் ஒன்றுகூடல் போன்று, ஒருவருடன் ஒருவர் அளவளாவுவதும், சந்தர்ப்பங்களில் முரண்நிலை பெறுவதும், கடமைக்காக விடயதானங்களைப் பேசி அவற்றைப் பதிவாக்கி விட்டு உறங்குநிலை பெறுவதும், கால அவகாசம் முடிவடைந்தததும் மீண்டும் மக்களை நாடி மண்டியிடுவதும் என்ற, பற்றற்ற அலங்கார உற்சவ மூர்த்திகளின் எழுந்தருள்கையாக இவர்களின் புரிதலற்ற ஆளுமை, அரசியல் சம்பிரதாயமாக பரம்பலடைகிறது. ஒருபோதும் மக்களின் பொதுநலன் கருதிய சேவை என்பது முழுமை பெறுவதில்லை, நிரம்பல் அடைவதில்லை.

இலங்கையைப் பொறுத்தவரையில் மக்கள் நலச் சிந்தனையில் அயர்ச்சி நிலையே ஆழ வேரூன்றியுள்ளது. குறிப்பாக ‘நல்லாட்சி’ என்ற சொல்லாட்சியின் அதிகார வரன்முறைகள், தமிழ்மக்கள் சார்ந்த உணர்திறன் தொடர்பில் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை.

இனவாத முலாம் பூசிய,துருப்பிடித்த அழிவின் கூர்முனையாக, தமிழர்களை அவர்களின் உரிமையின்பால் உய்யவிடாது துன்ப வினையாக நச்சரித்துக்கொண்டுள்ளன.

திட்டமிட்ட போர் வலயங்களின் உருவாக்கம், நில அபகரிப்பு, அதிகரித்த இராணுவப் பிரசன்னம், சுற்றிவளைப்பு, தமிழ் இளைஞர்கள் மீதான பலவந்தமான கைது நடவடிக்கை, காணாமல் போகச் செய்தல், தமிழ் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை, தமிழர் பொருண்மியத்தின் கட்டமிடப்பட்ட, திட்டமிட்ட சுரண்டல், மிக நீண்ட போர், இனப் படுகொலை என அவை ஆதரவற்ற, அநாதரவான துன்பியல் அடைமொழியாக விடியலை வேண்டி நிற்கின்றன. இதுவே யதார்த்தம்.

இந்த நிலையிலே, மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 37 ஆவது அமர்வு ஜெனீவாவில் இடம்பெற்று முடிந்திருக்கிறது. அந்தக் கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு முன்பாகவே இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படுத்தல்கள் பல முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக, “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் இலங்கை அரசு கொண்டுள்ள செயலற்ற தன்மை கவனிக்கத்தக்கது.

இந்தக் குற்றங்களுக்கு எதிராக பன்னாட்டளவிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.” என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹூசைன் தெரிவித்தமை கவனிப்புக்கு உரியது.

கடந்த பத்து மாதங்களில் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசு கண்டுகொண்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் சிறப்பு அறிக்கையை வெளியிட்ட அவர், போர்க் காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலில் அரசு தோல்வி கண்டுள்ளதையும், வெளிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர், மனித உரிமைகள் ஆணையம், இந்தவிடயங்களில் உலகளாவிய அதிகார வரம்பின் பயன்பாடு குறித்துச் சிந்திக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி யுள்ளார்.

இதனூடே மனித உரிமை மீறல்கள் மற்றும் தவறான மீறல்களுக்கு தண்டனையை வழங்குவதற்கான திறனை அல்லது விருப்பத்தை இலங்கை அரசும்,அதில் அங்கம் வகிக்கின்ற அதிகாரிகளும் இன்னமும் நிரூபிக்கவில்லை என்பதனையும் இடித்துரைத்துள்ளார்.

தவிர, இலங்கையில் நீதி முறைமை ஒன்றை அரசு அல்லது இராணுவ அதிகாரிகளுடன் கையாளும் போது, பிரதானமாக நீதித் துறையின் ஒட்டுமொத்த குணாம்சமானது, அரச அதிகாரிகள் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பாக நீதித்துறை நிர்வாகத்தில் ‘இரட்டை நிலைப்பாடு’ தலைதூக்கும் எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதனிடையே ஐ.நா மனித உரிமைகள் சபையின் 37 ஆவது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சைட் அல் ஹூசைன், இலங்கை அரசின் செயற்போக்கு தொடர்பில் வெளிப்படுத்தியுள்ள, குறிப்பாக உலகளாவிய சட்ட நடைமுறைகளை போர்க்குற்றம் தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டும். நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற கருத்துக்களும், அண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்களை சந்தித்த சுவிஸ் தூதுவரின், ‘அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்’ என்ற ஆறுதல் வார்த்தைகளும் செவி வழிச் செய்தியாகவே நகர்கின்றன.

ஏனெனில் போர் மற்றும் அதன் பின்விளைவு களின் இறுதிக் கட்டங்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் ஐ.நாவும், மற்றும் பல மனித உரிமைகள் அமைப்புக்களும் நம்பகமான ஆதாரங்களை பதிவு செய்துள்ளன. ஆனால் அவை காணாமற்போன நபர்கள் பற்றிய தகவலைச் சேகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இதற்கு இணையான கட்டியங்கூறலாக, புதிய அரசமைப்பின் செயல் வேகமும் ஆர்வமற்ற வேண்டா வெறுப்பான போக்கிலேயே பயணம் கொள்கிறது. இதனைத் தமிழர் பிரதிநிதித்துவங்கள் கூட ஏற்றுக்கொண்டுள்ளன.

இதனை ஐ.நா உதவிச் செயலரிடம் பட்டவர்த்தனமாக, காலத்துக்கேற்ற ‘திருவாசக முற்றோதலாக’ எடுத்தும் கூறித் தங்கள் வேலைகளில் ஒய்யாரம் கொள்கின்றனர்.

இத்தனைக்கும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக ஐ.நாவுக்கு தகவல் வழங்கியவர்களை ‘தமிழ்ப் புலி ஆதரவாளர்கள்’ எனச் சுட்டிக்காட்டி, நல்லாட்சியின் நாயகனாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்திருந்தமையும் இங்கு நோக்குதற்குரியது.

ஆக, நல்லாட்சி என்ற தற்கால நகர்வின் செயல்முறையில் பொதுவிவகாரங்கள், வளங்களின் மீது கட்டுப்பாடு, குறிப்பாக முறைகேடு மற்றும் ஊழலற்ற தன்மையில் மனித உரிமைகளின் உணர்வுகளுக்கு உத்தரவாதமளித்தல், உரிய கவனத்துடன் கூடிய சட்ட ஆளுகை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத் தன்மை போன்றவற்றுக்கு உரித்தான தொடர்புறலைக் கண்டுகொள்ள முடியவில்லை.

நல்லாட்சியின் உண்மையான அளவீடு என்பது, நியாயமான சட்ட உரிமை, தனிப்பட்ட பாதுகாப்பு, குடியியல், கலாசார, பொருண்மிய மற்றும் சமூக உரிமைகள் போன்ற ‘மனித உரிமைகளின்’ வாக்குறுதிகள் மீதான வெளிப்படுத்தல்களின் அளவாக இருக்க வேண்டும். ஆனாலும், இந்த விடயங்கள் இன்னமும் தேடல் நிலையிலேயே உள்ளதாகவே தோன்றுகிறது. இதிலிருந்து முயற்சியின் விளிம்பை அடைவது என்பது கடினம்.

எனவே தமிழர்களுக்கான தீர்வு என்பது, இன்றைய நிலையில் கேள்விக்கு உரியதொன்றே. சுதந்திரமான விடுதலை என்பதும் பகல் கனவை ஒத்ததே.

மொத்தத்தில், நல்லாட்சி என்பது வெறும் வெத்து வேட்டு நாடகமே.

-நன்றி வீ.கே.