வீதியில் துரத்திச் சென்று பெண்ணின் கழுத்தறுத்துக் கொன்ற சிறிய தந்தை!

வீதியில் துரத்திச் சென்று பெண்ணின் கழுத்தறுத்துக் கொன்ற சிறிய தந்தை!

18 June 2019 08:45 am

கத்தியால் கழுத்தில் பல தடவை குத்தப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சகோதரன் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூரத்தை உயிரிழந்தவரின் சிறிய தந்தையே செய்துள்ளார். அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை முற்பகல் நடந்துள்ளது.

இருபாலை வி.எம். வீதியைச் சேர்ந்த பா.பரிதா (வயது - 30) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது மூத்த சகோதரன் பா.ஜெயபாலன் (வயது - 35) காயத்துடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரச் சம்பவத்துக்குக் காணிப் பிணக்கே காரணம் என்று கூறப்படுகின்றது. காணிப் பிணக்கால் அயலவர்களான உறவினர்களுக்கு இடையே நீண்டகாலமாகப் பிணக்கு இருந்தது என்றும், அதன் தொடர்ச்சியாக சிறிய தந்தை இந்தக் கொடூரச் செயலைப் புரிந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

கந்தவேள் பாடசாலைக்கு முன்பாக வைத்துச் சிறிய தந்தை பெறாமகனுக்கு வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். அவர் நிலத்தில் சரிந்து விழுந்துள்ளார். கத்தியால் குத்தியவர் கத்தியுடன் சைக்கிளில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார். அப்போது வழியில் பெறாமகளைக் கண்டுள்ளார். அவரைக் கத்தியால் குத்த முயன்றபோது அந்தப் பெண் சிறிய தந்தையை தள்ளி வீழ்த்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

அவரைச் சிறிய தந்தை துரத்திச் சென்றுள்ளார். தப்பியோடிய பெண் தடுமாறி விழுந்தபோது சிறிய தந்தை அவரது கழுத்தில் பல தடவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.